நேபாளில் கடந்த வியாழக்கிழமை முதல் இடைவிடாமல் பெய்து வரும் கனமழையால் புதிய வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. பல வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதுடன், முக்கிய சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
நேபாள–திபெத் எல்லைப் பகுதியில் கடந்த மாதம் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பேரழிவின் தாக்கம் இன்னும் நீங்காத நிலையில், அந்த பேரிடரில் இதுவரை 1,453 பேர் உயிரிழந்ததாகவும், 5,000-க்கும் மேற்பட்டோர் இன்னும் காணாமல் பொயுள்ளனர் என்றும் தேசிய பேரிடர் அபாயக் குறைப்பு மற்றும் மேலாண்மை ஆணையம் (NDRRMA) தெரிவித்துள்ளது.
லும்பினி மாகாணத்தின் ரூபந்தேஹி மாவட்டத்தில், டினாவ் ஆற்றின் நீர்மட்டம் அபாய அளவை கடந்ததால் புட்வால் நகரில் ஆற்றங்கரையிலிருந்த 6 வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. மேலும், சுமார் 200 வீடுகள் ஆபத்தில் இருப்பதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இதையடுத்து பாதுகாப்புப் படையினர் இரவு முழுவதும் மீட்பு பணியில் ஈடுபட்டு 1,000-க்கும் மேற்பட்ட மக்களை பள்ளிகள் மற்றும் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைத்தனர்.
பக்மதி மாகாணத்தின் சித்வான் மாவட்டத்தில் நாராயணி ஆறும், ரியூ ஆறும் அபாய அளவை கடந்தன. தேவ்காட் கண்காணிப்பு நிலையத்தில் நாராயணி ஆற்றின் நீர்மட்டம் 9.23 மீட்டராக பதிவாகியது. இதன் அபாய அளவு 9 மீட்டர் என்பதால் அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
சித்வான், முசு, காலிகோட் மற்றும் ஹும்லா மாவட்டங்களில் பல இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் சேற்றுச் சரிவுகள் காரணமாக சாலைகள் இரு திசைகளிலும் முடங்கின. கர்ணாலி நெடுஞ்சாலை மற்றும் கர்ணாலி காரிடார் உள்ளிட்ட முக்கிய வழித்தடங்களில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
இதற்கிடையில், சனிக்கிழமை நாராயணி மற்றும் சப்தகோஷி ஆறுகளின் வெள்ளம் 389 வீடுகளை நீரில் மூழ்கடித்ததால் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம்பெயர்ந்தன.
மழை தொடரும் நிலையில், வெள்ளம் மற்றும் நிலச்சரிவு அபாயப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்து, நீர்மட்டம் உயர்ந்தால் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு நேபாள அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.