'இறுதி மூச்சு வரை உறுதியாக நிற்போம்' - ஈரான் ஜனாதிபதி

தனது அரசாங்கம் இறுதி மூச்சு வரை உறுதியாக நிற்கும் என்றும் ஈரான் மக்களுக்குத் தொடர்ந்து சேவையாற்றும் என்றும் ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் சூளுரைத்தார்.

சண்டையை முடிவுக்குக் கொண்டுவருதல், ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறத்தல் மற்றும் அணுசக்தி தொடர்பான பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பித்தல் ஆகியவற்றுக்காக ஈரான் முன்வைத்த ஏழு நாள் திட்டத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிராகரித்த நிலையில், அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

நியூயார்க்கில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்றுத் திரும்பிய பின்னர், விமான நிலையத்தில் தன்னை வரவேற்ற ஆதரவாளர்களிடம் பேசிய போதே பெசெஷ்கியன் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது, "நாங்கள் வலிமையுடன் உறுதியாக நிற்கிறோம். எங்கள் மக்களின் சேவையில் ஈடுபட்டுள்ளோம். இறுதி மூச்சு வரை உறுதியாக நிற்போம் என்று அவர் கூறினார்.

ஹோர்முஸ் நீரிணையின் நிர்வாக விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுவதற்கு எதிராக ஈரானின் ஆயுதப் படைகள் எச்சரிக்கை விடுத்திருந்த அதே வேளையில், அவரது இந்தக் கருத்துகளும் வெளியாகின.

Bootstrap