2015-இல் வெளியான ‘Avengers: Age of Ultron’ திரைப்படத்தில் ரோபோக்கள் போர்க்களத்தில் இறங்குவது அறிவியல் புனைகதையாக இருந்தது. ஆனால், 11 ஆண்டுகளுக்குப் பிறகு, அதேபோன்ற ஒரு காட்சியை நிஜ உலக போர்க்களத்தில் உருவாக்கும் முயற்சியில் உக்ரைன் இறங்கியுள்ளது. ரஷ்யாவுடனான போருக்கு மத்தியில், ’Army of Robots’ என்ற புதிய பாதுகாப்புத் தொழில்நுட்பத் திட்டத்தை உக்ரைன் பாதுகாப்புத் துறை முன்னாள் அமைச்சர் மைகைலோ ஃபெடோரோவ் அறிவித்துள்ளார்.
இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம், போர்க்களத்தில் மனித வீரர்களுக்கு பதிலாக ரோபோக்களை அதிக அளவில் பயன்படுத்தி, வீரர்களின் உயிரிழப்பு மற்றும் ஆபத்தைக் குறைப்பதாகும். ஃபெடோரோவின் கூற்றுப்படி, இது ஒரு தனி நிறுவனம் அல்ல; பாதுகாப்புத் தொழில்நுட்ப நிறுவனங்களில் முதலீடு செய்வது, புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குவது, அவற்றை ராணுவத்துடன் இணைந்து சோதிப்பது என முழுமையான தொழில்நுட்பச் சூழலாக உருவாக்கப்பட உள்ளது.
காயமடைந்த வீரர்களை மீட்பது, வெடிபொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களை எடுத்துச் செல்வது, உளவு பார்ப்பது, கண்ணிவெடிகளைக் கண்டறிந்து அகற்றுவது, பாதுகாப்பு நிலைகளைப் பராமரிப்பது போன்ற ஆபத்தான பணிகளில் ரோபோக்களை ஈடுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. எதிரி இலக்குகளைத் தாக்கும் திறன்கொண்ட அமைப்புகளையும் உருவாக்கும் நோக்கம் இருப்பதாக ஃபெடோரோவ் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம், மனித வீரர்கள் நேரடியாக ஆபத்தான பகுதிக்குள் செல்ல வேண்டிய அவசியத்தைக் குறைக்க முடியும் என்பது உக்ரைனின் நோக்கமாக உள்ளது. இந்த முயற்சி, ஃபெடோரோவ் 2022-இல் தொடங்கிய ’Army of Drones’ திட்டத்தின் அடுத்தகட்டமாகப் பார்க்கப்படுகிறது. தற்போது உக்ரைன் போரில் ட்ரோன்கள் மட்டுமின்றி, Unmanned Ground Vehicles, அதாவது ஆளில்லா தரை வாகனங்களைப் போரில் பயன்படுத்தி வருகிறது.
உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகத்தின் தகவல்படி, 2026 ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் தரை ரோபோ அமைப்புகள் 25,000-க்கும் மேற்பட்ட சரக்கு மற்றும் வீரர் மீட்புப் பணிகளை மேற்கொண்டுள்ளன. ஆண்டின் தொடக்கத்திலிருந்து செப்டம்பர் தொடக்கம் வரை சுமார் 1.12 லட்சம் பணிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஜனவரி மாதத்துடன் ஒப்பிடும்போது ஆகஸ்ட் மாதப் பணிகள் 3.3 மடங்கு அதிகரித்துள்ளன.
ஃபெடோரோவின் திட்டம் இன்னும் வளர்ச்சி மற்றும் சோதனை நிலையில் உள்ளது. குறிப்பாக, மனித வடிவ ரோபோக்களைப் போர்க்களத்தில் பயன்படுத்துவது இந்த திட்டத்தின் முக்கிய இலக்குகளில் ஒன்றாகக் கூறப்படுகிறது. அவருடைய விளக்கத்தின்படி, எதிர்காலத்தில் மனித வீரர்கள் பாதுகாப்பான தொலைவில் இருந்து ரோபோக்களை இயக்கும் வகையில் போர்முறை மாறலாம்.
இதனால், உக்ரைன்–ரஷ்யா போர் மனிதர்களுக்கும் ஆயுதங்களுக்கும் இடையிலான மோதல் மட்டுமல்லாமல், ரோபோட்டிக்ஸ் மற்றும் AI தொழில்நுட்பங்களின் சோதனை களமாகவும் மாறி வருகிறது. ஆனால், முழுமையாக மனிதர்களுக்கு பதிலாக ரோபோக்கள் போர் செய்யும் நிலை இன்னும் எதிர்காலத் திட்டமாகவே உள்ளது.