எங்களை மன்னித்துக் கொள்ளுங்கள் என கனடா மன்னிப்பு கோரும் :டொனால்ட் டிரம்ப்

எங்களை மன்னித்துக் கொள்ளுங்கள் என கனடா மன்னிப்பு கோரும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் வாரங்களில் கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை எட்ட முடியும் என நம்புவதாக குறிப்பிட்டுள்ளார்.

கனடாவின் குறிப்பிட்ட சில பொருட்கள் மீது அமெரிக்கா விதிக்கவுள்ள இறக்குமதித் தடைகள் அமுலுக்கு வர சில மணிநேரங்களே எஞ்சியிருந்த நிலையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய போது டிரம்ப் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அடுத்த மூன்று அல்லது நான்கு வாரங்களுக்குள் கனடா தரப்பு தம்மைத் தொடர்புகொள்ளும் என்றும், அதில் அமெரிக்கா "அனைத்தையும் வெல்லும்" என்றும் குறிப்பிட்டார்.

அவர்கள் நம்மிடம் வந்து 'ஐயா, எங்களை மன்னித்துவிடுங்கள்' என்று கூறுவார்கள். கனடா அமெரிக்காவை மிகவும் மோசமாக நடத்தியுள்ளது. ஆனால் ஒரு நியாயமான ஒப்பந்தம் எட்டப்படும் என நான் நினைக்கிறேன் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கக் கிழக்கு நேரப்படி செவ்வாய்க்கிழமை அதிகாலை 12:01 மணி முதல் அமுலுக்கு வரவுள்ள இந்தத் தடைகள், முக்கியமாக கனடாவின் மதுபானங்கள், பால் துணைப் பொருட்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களைப் பாதிக்கின்றன.

இந்தத் தடையால் பாதிக்கப்படும் கனடிய ஏற்றுமதிப் பொருட்களின் மதிப்பு சுமார் 1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

கடந்த மாதம் இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் போர் மேலும் தீவிரமடைந்துள்ளது.

 

Bootstrap