கனடாவின் மில்டன், கேம்பிரிட்ஜ் மற்றும் எலோரா ஆகிய பகுதிகளில் தொடர்ச்சியாக வீடுகளுக்குள் புகுந்து திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 65 வயது முதியவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹால்டன் பிராந்திய பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டவருக்கு எதிராக மொத்தம் 12 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
கடந்த செப்டம்பர் 4 ஆம் திகதி மாலை வேளையில், மில்டனின் கேம்ப்பெல்வில் பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு வீட்டிற்குள் சந்தேகநபர் சட்டவிரோதமாக நுழைந்துள்ளார்.
ஏணி ஒன்றைப் பயன்படுத்தி வீட்டிற்குச் சென்ற சந்தேகநபர், இரண்டாம் தளத்தில் உள்ள 'பேஷியோ' கதவு வழியாக வீட்டிற்குள் புகுந்து, அங்கிருந்த விலைமதிப்பற்ற பொருட்களைக் கொள்ளையடித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக ஹால்டன் பொலிஸின் முதலாம் மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நடத்திய தீவிர விசாரணையில், இவரே கேம்பிரிட்ஜ் மற்றும் எலோரா ஆகிய பகுதிகளிலும் நடைபெற்ற பல திருட்டுச் சம்பவங்களுக்கும் காரணமானவர் என அடையாளம் காணப்பட்டார்.
இதையடுத்து, பொலிஸாரால் இவர் "தொடர் திருட்டுச் சந்தேகநபர்" என விவரிக்கப்பட்டுள்ளார். கடந்த செப்டம்பர் 22 ஆம் திகதி கிச்சனர் பகுதியைச் சேர்ந்த 65 வயதான ராபர்ட் சிபுல்ஸ்கி என்பவர் அவரது வீட்டில் வைத்துப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
சந்தேகநபர் இந்தத் திருட்டுச் சம்பவங்களின் போது 2016 ஆம் ஆண்டு தயாரிப்பான கருப்பு நிற ஹோண்டா அக்கார்ட் காரைப் பயன்படுத்தியுள்ளதை புலனாய்வாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
சந்தேகநபர் மேலும் பல திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டிருக்கலாம் என பொலிஸார் நம்புவதால், இது குறித்த மேலதிகத் தகவல்கள் ஏதேனும் தெரிந்தால் 905-825-4777 (ext. 2416) என்ற எண்ணில் குற்றப் புலனாய்வுப் பிரிவையோ அல்லது 'க்ரைம் ஸ்டாப்பர்ஸ்' அமைப்பையோ இரகசியமாகத் தொடர்புகொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.