இஸ்ரேல் போரின் கோர முகம்! காசாவில் 82% கட்டடங்கள் சிதைவு.. வெளியான செயற்கைக்கோள் படம்!

இஸ்ரேல் - ஹமாஸ் போரினால் காசா பகுதியில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத பேரிழப்புகளை கூகுள் மேப் தளத்தின் புதுப்பிக்கப்பட்ட செயற்கைக்கோள் புகைப்படங்கள் உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன. 1997இல் அமெரிக்கா இயற்றிய கைல்- பிங்கமன் திருத்தம் (Kyl-Bingaman Amendment ) போன்ற சட்டக் கட்டுப்பாடுகளால் காசா மற்றும் பாலஸ்தீனப் பகுதிகளின் கூகுள் செயற்கைக்கோள் படங்கள் பல ஆண்டுகளாகப் புதுப்பிக்கப்படாமல் வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், கூகுள் நிறுவனம் உயர் தெளிவுத்திறன் கொண்ட செயற்கைக்கோள் படங்களைப் பதிவேற்றம் செய்துள்ளதால், காசா நகரின் குடியிருப்புப் பகுதிகள், மருத்துவமனைகள், பள்ளிகள் உள்ளிட்டவை தரைமட்டமாக்கப்பட்டு காட்சியளிப்பது தெரியவந்துள்ளது.

ஐநாவின் செயற்கைக்கோள் மையம் வெளியிட்ட தரவுகளின்படி, மொத்தக் கட்டடங்களில் சுமார் 82 சதவீதம் போரினால் சேதமடைந்துள்ளன. இதில் சுமார் ஒரு லட்சத்து 34 ஆயிரம் கட்டடங்கள் முற்றிலும் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. 2023 ஆகஸ்ட் மாதப் படங்களுடன் 2026இல் எடுக்கப்பட்ட காட்சிகளை ஒப்பிடுகையில், தெற்கு காசாவின் ரஃபா, (Rafah) கான் யூனிஸ் (Khan Younis) மற்றும் வட காஸாவின் ஜபாலியா (Jabalia) போன்ற பகுதிகள் சுவடு தெரியாமல் மாறியுள்ளன.

காஸா சுகாதார அமைச்சக தகவல்படி, இதுவரை 74 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், 1 லட்சத்துக்கும் 75 ஆயிரத்துக்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடியிருப்புகள், விவசாயப் பண்ணைகள், பள்ளிகள், வழிபாட்டுத் தலங்கள் இருந்த இடங்களில் தற்போது சாம்பல் நிற இடிபாடுகளும் இடம்பெயர்ந்த மக்களுக்கான கூடாரங்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. காஸாவின் உள்கட்டமைப்புகளில் 90 சதவீதம் முற்றிலும் சீர்குலைந்துள்ள இந்த காட்சிப் பதிவுகள், சர்வதேச மனித உரிமை அமைப்புகள் மற்றும் சமூக ஆர்வலர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

Bootstrap