கின்னஸ் சாதனையை முறியடித்த 3 வயது குழந்தை

ஹூலா ஹூப் வளையத்தில் சென்று வரும் கின்னஸ் சாதனையை, தந்தையுடன் இணைந்து 3 வயது குழந்தை முறியடித்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

அமெரிக்காவின் ஐடஹோ மாகாணத்தைச் சேர்ந்தவர் டேவிட் ரஷ் (வயது 41) . இவருடைய மனைவி ஜெனிபர் ரஷ். இவர்களுக்கு ஜெரெமி (வயது 12) மற்றும் பீட்டர் (வயது 10) ஆகிய மகன்களும், பெலிசிட்டி (வயது 3) என்ற மகளும் உள்ளனர். மகன்கள் ஜெரெமி மற்றும் பீட்டர் ஆகியோர் தந்தையின் வழிகாட்டுதலுடன், கண்களை கட்டிக்கொண்டு சாண்ட்விச் தயாரித்தல், தண்ணீர் பலூன் எறிந்து பிடித்தல் உள்ளிட்ட கின்னஸ் உலக சாதனைகளைப் படைத்து, அதற்கான அதிகாரப்பூர்வ சான்றிதழ்களை பெற்றுள்ளனர்.

இதனைப் பார்த்த பெலிசிட்டிக்கும் ஒரு கின்னஸ் உலக சாதனை சான்றிதழ் வாங்க வேண்டும் என்ற ஆசை வந்துள்ளது. இதுபற்றி அவர் தனது தந்தையிடம் கேட்டுள்ளார். அத்துடன் தன் தந்தை ஹூலா ஹூப் வளையத்தை வைத்து பயிற்சி செய்வதை பார்த்து அதன் மீது ஆர்வம் கொண்ட பெலிசிட்டி, தந்தையுடன் இணைந்து பயிற்சியினை மேற்கொண்டு வந்தார்.

பின்னர் மகளின் ஆர்வத்தை புரிந்து கொண்ட டேவிட் ரஷ், மகளுக்காக ஒரு சாதனை சான்றிதழைப் பெற்று தர வேண்டும் என்பதற்காக தீவிர பயிற்சி அளித்து வந்தார். குறிப்பாக, பெலிசிட்டிக்கு விளையாடும் ஆர்வம் இருக்கும்போது மட்டுமே இந்த பயிற்சியை அளித்து வந்ததாக டேவிட் ரஷ் தெரிவித்தார்.

இவ்வாறு தொடர்ந்து தந்தையுடன் இணைந்து பயிற்சி செய்த பெலிசிட்டி, கடந்த மாதம் 29 ஆம் திகதி கின்னஸ் சாதனை முயற்சியை மேற்கொண்டார். தந்தையுடன் இணைந்து 30 வினாடிகளில் பின்னோக்கிச் சுழற்றப்படும் ஹூலா ஹூப் வளையத்திற்குள் நுழைந்து வரும் முயற்சியில், 9 முறை சென்று திரும்பி வெற்றிகரமாக உலக சாதனையை முறியடித்தார். இதற்கு முந்தைய உலக சாதனையாக இந்தியாவை சேர்ந்த கின்னஸ் சாதனையாளரான கோகுல்நாத் என்பவர் தனது மகனுடன் இணைந்து 30 வினாடிகளில் 8 முறை ஹூலா ஹூப் வளையத்தில் நுழைந்து வெளியே வந்து சாதனை படைத்திருந்தார்.

இதனை முறியடித்து சாதனை படைத்த குழந்தை பெலிசிட்டியின் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. குழந்தையின் சாதனையை அங்கீகரிக்கும் வகையில் அவருக்கு நேற்று (29) கின்னஸ் உலக சாதனை சான்றிதழ் வழங்கப்பட்டது.

இதுகுறித்து டேவிட் ரஷ் தெரிவிக்கையில்,

‘பெலிசிட்டிக்கு ஆர்வம் இருக்கும்போது மட்டுமே பயிற்சி அமர்வுகள் நடைபெறும். அவள் முயற்சிக்க விரும்பும்போது முயற்சி செய்தோம், சோர்வடையும் போது முயற்சியை நிறுத்தினோம்’ என்றார்.

Bootstrap