ரணில் விக்கிரமசிங்கவின் வழக்கு ஒத்திவைப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் தனது மனைவி மைத்திரி விக்கிரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக அரச நிதியில் லண்டனுக்கு மேற்கொண்ட தனிப்பட்ட பயணம் தொடர்பான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, இந்த வழக்கு எதிர்வரும் நவம்பர் 11 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற்று அறிக்கை சமர்ப்பிப்பதற்காக வழக்கை எதிர்வரும் நவம்பர் 11 ஆம் திகதி வரை ஒத்திவைக்குமாறு கோட்டை நீதவான் பசன் அமரசேன உத்தரவிட்டுள்ளார்.

ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான வழக்கின் விசாரணைக் கோப்பு சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளது.

வழக்கு தொடர்பான அனைத்து விசாரணைகளும் நிறைவடைந்துள்ளதாக தெரிவித்துள்ள குற்றப்புலனாய்வுத் திணைக்களம், சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெறுவதற்காக மேலதிக கால அவகாசத்தையும் கோரியுள்ளது.

Bootstrap