திலீபனுடைய சிலை அகற்றப்பட்டதை கண்டித்து வெள்ளிக்கிழமை வரை தொடர் போராட்டம்

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நினைவிடத்திலிருந்து திலீபனுடைய சிலை அகற்றப்பட்டதை கண்டித்து, இன்று மாலை 5 மணியிலிருந்து நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை வரை தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அகற்றப்பட்ட திலீபனுடைய சிலையை நினைவிடத்தில் மீள வைக்கக் கோரி இரவு பகலாக இந்த தொடர் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

யாழ்ப்பாண மாவட்ட பொது அமைப்புகள் இணைந்து இந்த தொடர் போராட்டத்தினை ஒழுங்கு செய்துள்ளன.

அதற்கமைய, இன்று மாலை 5 மணிக்கு ஏற்றப்பட்ட பொதுச் சுடரை தொடர்ச்சியாக எரிய விடப்பட்டு, திலீபனின் சிலைக்கான நீதியைக் கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்த போராட்டத்திற்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக சமூகத்தினர், வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுடைய சங்கங்கள், தமிழ் தேசிய அரசியல் கட்சிகள் உள்ளிட்டோர் தமது ஆதரவை வழங்க வேண்டும் என இணைந்து ஏற்பாட்டாளர்கள் கோரியுள்ளனர்.

Bootstrap