ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகியுள்ள ‘சிக்மா’ திரைப்படத்தின் Pre-Release நிகழ்வு நேற்று சென்னையில் நடைபெற்றது.
எனினும், திரைப்படத்தின் இயக்குநர் ஜேசன் சஞ்சய் இந்த முக்கிய நிகழ்வில் கலந்துகொள்ளாதது ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது.
இந்நிலையில், படத்தின் விளம்பரப் பணிகளுக்காக பல்வேறு இடங்களுக்கும் தொடர்ந்து பயணம் மேற்கொண்ட ஜேசன் சஞ்சய்க்கு வைரஸ் தொற்று காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் தமிழ் குமரன் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாகவே அவர் Pre-Release நிகழ்வில் பங்கேற்கவில்லை என்றும், திரைப்படம் வெளியான பின்னர் ஜேசன் சஞ்சய் நேரடியாக பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசுவார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ‘சிக்மா’ திரைப்படத்தை ஜேசன் சஞ்சய் மிகவும் சிறப்பாக இயக்கியுள்ளதாகத் தெரிவித்த தயாரிப்பாளர் தமிழ் குமரன், படத்தின் மிகப்பெரிய தூணாக அவர் விளங்குவதாகவும் பாராட்டியுள்ளார்.
திரைப்படத்திற்கான அனைத்து பணிகளும் நிறைவடைந்துள்ள நிலையில், இனி ‘சிக்மா’ திரைப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பொறுப்பு பத்திரிகையாளர்கள் மற்றும் பொதுமக்களிடம் இருப்பதாகவும் தயாரிப்பாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதனிடையே, ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள ‘சிக்மா’ திரைப்படம் தொடர்பான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மேலும் அதிகரித்துள்ளது.