சென்னையின் பல முக்கிய அடையாளங்களுக்கு பின்னால் ஒரு வரலாறு இருக்கும்... அந்த வகையில், ரஜினிகாந்த் ரசிகர்களுக்கும், தமிழ் சினிமாவுக்கும் நெருக்கமான ஒரு இடம்தான் கோடம்பாக்கத்தில் உள்ள ஸ்ரீராகவேந்திரா திருமண மண்டபம்!
ரஜினிகாந்த் ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்திப்பது.. ரசிகர் மன்றப் பணிகள் குறித்து ஆலோசிப்பது.. என பல முக்கிய நிகழ்வுகளுக்கு இந்த மண்டபம் சாட்சியாக இருந்திருக்கிறது. இப்படியிருக்க, 36 ஆண்டுகளாக ரஜினிகாந்த் குடும்பத்துடன் பயணித்து வந்த இந்த மண்டபம் இடிக்கப்பட உள்ளதாகவும் அங்கு நட்சத்திர ஹோட்டல் வர இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரித்துள்ள புதிய வெப் சீரிஸ் தொடர்பாக சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்போது சௌந்தர்யா ரஜினிகாந்திடம், ராகவேந்திரா திருமண மண்டபம் இடிக்கப்படுவதாக வெளியாகும் தகவல்கள் உண்மையா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த சௌந்தர்யா ரஜினிகாந்த், ராகவேந்திரா திருமண மண்டபம் சென்னையின் மிகப்பெரிய அடையாளங்களில் ஒன்று என்றும், கடந்த 36 ஆண்டுகளாக தங்கள் குடும்பத்துடன் பயணித்து வருவதாகவும் தெரிவித்தார். மேலும், ஒரு காலகட்டம் முடிவடையும் போது, அடுத்த கட்டத்துக்கு செல்ல வேண்டும்.. காலத்துக்கு ஏற்ப மாற வேண்டும் என்பது தனது அப்பா ரஜினிகாந்தின் எண்ணம் என்றும் அவர் கூறியுள்ளார்.
தொடர்ந்து, “ராகவேந்திரா திருமண மண்டபத்தின் பயணம் முடிந்துவிட்டது. அதற்கு அடுத்து என்ன செய்வது என்பது குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது” என்றும் சௌந்தர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இதன்மூலம், மண்டபம் தொடர்பாக வெளியாகி வந்த தகவல்கள் உண்மைதான் என்பது உறுதியாகியுள்ளது.
1990-களில் கட்டப்பட்ட இந்த மண்டபம், ரஜினிகாந்த் ரசிகர்களுடனான சந்திப்புகளுக்கும், ரசிகர் மன்ற நிர்வாகிகள் தொடர்பான ஆலோசனைகளுக்கும் முக்கிய இடமாக இருந்துள்ளது. பல ஆண்டுகளாக சென்னையின் ஒரு அடையாளமாகவும், ரஜினி ரசிகர்களின் நினைவுகளோடும் இணைந்திருந்த இந்த இடத்தின் பயணம் முடிவுக்கு வருகிறது.