பெரும் ஆபத்தில் ஐரோப்பா : சுவிட்சர்லாந்தில் தொடங்கிய அழிவு.. எச்சரிக்கை விடுத்த ஆய்வாளர்கள்!

ஐரோப்பாவில் உள்ள ஆல்ப்ஸ் மலைத்தொடரில் அதிக எண்ணிக்கையிலான பனிப்பாறைகளைக் கொண்ட நாடாக சுவிட்சர்லாந்து திகழ்ந்து வருகிறது. உலகம் முழுவதும் பனிப்பாறைகள் வேகமாக உருகிவரும் நிலையில், அந்த பேரழிவில் இருந்து ஆல்ப்ஸ் மலை தொடரும் தப்பவில்லை.

சுவிஸ் பனிப்பாறை கண்காணிப்பு அமைப்பான GLAMOS மற்றும் சுவிஸ் அறிவியல் அகாடமி ஆகிய அமைப்புகள் சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஆல்ப்ஸ் மலைத்தொடரில் பனிப்பாறைகள் உருகுவது முன்னெப்போதும் இல்லாத அளவு அதிகரித்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில் சுவிட்சர்லாந்தில் மட்டும் இந்த ஆண்டு பனிப்பாறைகளின் அளவு 5.5 சதவீதம் குறைந்துள்ளது என்றும், ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் இந்த மலை தொடரில் 2.2 டிரில்லியன் லிட்டர் பனி இழக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும், சுவிட்சர்லாந்தில் உள்ள பனியின் அளவு கிட்டத்தட்ட ஐந்தில் ஒரு பங்கு குறைந்துள்ளதாகவும், இதற்கு மனிதர்களால் செயற்கையாக உருவாக்கப்பட்ட உலகவெப்பமயமாதலே காரணம் என்றும் இந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் முதல் அழிவு சுவிட்சர்லாந்தில் ஏற்பட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது.

தெற்காசிய பகுதிகளின் மிகப்பெரிய ஆறுகளுக்கு நீர் ஆதாரமாக இமயமலை விளங்குவதை போல, ஐரோப்பாவில் உள்ள டான்யூப், போ, ரைன் மற்றும் ரோன் போன்ற முக்கிய நதிகள் உருவாகும் இடமாக பனி மலைகளை கொண்ட ஆல்ப்ஸ் மலை தொடர் திகழ்ந்து வருகிறது. இந்த ஆறுகளில் தொடர்ந்து தண்ணீர் ஓட ஆல்ப்ஸ் மலையில் உருகும் பனியே முக்கிய காரணமாக திகழ்ந்து வருகிறது.

இதன் காரணமாக ஆல்ப்ஸ் மலையில் பனி உருகுவது ஐரோப்பாவின் பாதி நாடுகளில் கடும் தண்ணீர் பற்றாக்குறையை ஏற்படுத்தும் என அச்சம் எழுந்துள்ளது. மேலும் ஐரோப்பிய நாடுகளில் வரும் காலங்களில் பெரும் பஞ்சத்துக்கும் இது வழிவகுக்கும் என்றும் இதனால் பல கோடி பேர் பாதிக்கப்படுவார்கள் என்றும் அச்சம் எழுந்துள்ளது.

Bootstrap