200 ஆண்டுகளில் முதல்முறை.. மரண தண்டனை எதிர்கொண்ட முதல் பெண்!

அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தில் 200 ஆண்டுகளுக்குப் பிறகு பெண் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. எனினும், கடைசி நேரத்தில் அதிலிருந்து உயிர் தப்பியுள்ளார். இந்த நிகழ்வு அமெரிக்காவைத் தவிர்த்து உலகம் முழுவதும் பேசுபொருளாகி உள்ளது.

200 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தில் மரண தண்டனை நிறைவேற்ற எதிர்கொண்ட முதல் பெண்மணி க்ரிஸ்டா பைக் ஆவார். 1995-ஆம் ஆண்டு டென்னசியின் நாக்ஸ்வில்லில் அமைந்திருந்த 'ஜோப் கார்ப்ஸ்' பயிற்சி மையத்தில், க்ரிஸ்டா பைக்வுக்கு 18 வயதாக இருந்தபோது, அவர் தனது சக மாணவியான கொலீன் ஸ்லெம்மர் என்பவரை கொடூரமாகத் தாக்கிப் படுகொலை செய்தார். 1996-ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற இவ்வழக்கின் முடிவில், நீதிமன்றம் இவருக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. குற்றத்தின்போது 18 வயதாக இருந்த க்ரிஸ்டாவுக்கு பைபோலார் கோளாறு, பிடிஎஸ்டி போன்ற தீவிர மனநலப் பாதிப்புகள் மற்றும் சிறுவயதில் நேர்ந்த கொடுமைகள் காரணமாகவே இந்த அசம்பாவிதம் நிகழ்ந்தது என்றும், 18 வயதில் மூளை வளர்ச்சி முழுமையடையாததால் அவருக்கு மரண தண்டனை அளிக்கக் கூடாது என்றும் வழக்கறிஞர்களும் சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் வாதிட்டனர்.

மேலும், தாம் செய்த குற்றத்திற்காக வருந்துவதாகவும், சிறுவயது மனநலப் பாதிப்பால் நேர்ந்த தவறு இது என்றும் கூறி ஆளுநரிடம் கருணை மனுத் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், மாகாண ஆளுநர் இந்தக் கருணை மனுவை நிராகரித்தார். இந்த நிலையில்தான், நேற்று அவருக்கு மீண்டும் தண்டனை நிறைவேற்ற திட்டமிடப்பட்டிருந்த சூழலில், கடைசி நேரத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடுகள் மற்றும் சட்டச் சிக்கல்களால் இது சர்வதேச அளவில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. எனினும், இதிலிருந்து அவர் தற்போதைக்கு உயிர் தப்பியுள்ளார்.

முன்னதாக, டென்னசியில் கடைசியாக 1820-ஆம் ஆண்டு 'ஈவ் மார்ட்டின்' என்ற பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருந்தது. மேலும், இந்த ஆண்டு டென்னசியில் தோல்வியுற்ற மரணதண்டனை நிறைவேற்றுதல் நிகழ்வு இது இரண்டாவது முறையாகும். அமெரிக்காவில் பெண் சிறைக் கைதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுவது மிகவும் அரிதானது. 1976-ல் உச்ச நீதிமன்றம் மரண தண்டனையை மீண்டும் தொடங்க அனுமதித்ததிலிருந்து, இதுவரை மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட 1,683 பேரில் 18 பேர் மட்டுமே பெண்கள் என மரண தண்டனை தகவல் மையம் தெரிவித்துள்ளது.

Bootstrap