தாக்கப்பட்ட இந்திய விமானி Smit Machchhar இப்போது எங்கு இருக்கிறார்? - வெளியுறவுத் துறை விளக்கம்

ஃபிளைதுபாய் விமானம் ஒன்றில் இந்திய விமானி ஸ்மித் மச்சாரைச் சக விமானி கத்தியால் குத்தியிருந்தார்.

இதில் ஸ்மித் மச்சாருக்குக் கடுமையான ரத்தப்போக்கு ஏற்பட்டு, சவூதி அரேபியாவில் விமானம் தரையிறங்கியபோது, அவர் மோசமான நிலையில் இருந்தார் என்று விமானத்தில் ஸ்மித் மச்சாருக்குச் சிகிச்சையளித்த பல் மருத்துவர் ஷோட்டா மூசாயேவ் கூறியிருந்தார்.

தற்போது ஸ்மித் மச்சார் எப்படி இருக்கிறார் என்பதற்கான அறிக்கையை வெளியிட்டுள்ளது இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம்.

அந்த அறிக்கையில், “இந்தியக் குடிமகனும், ‘ஃபிளைதுபாய்’ FZ 1073 விமானத்தின் வீரம் நிறைந்த முதன்மை விமானியுமான கேப்டன் ஸ்மித் மச்சாரின் உடல்நிலையை நாங்கள் தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம்.

சவூதி அரேபியாவின் தபூக்கில் உள்ள மருத்துவமனையில் முதற்கட்ட மருத்துவச் சிகிச்சையைப் பெற்ற பிறகு, அவர் மேல்சிகிச்சைக்காகத் தற்போது அபுதாபிக்கு மாற்றப்பட்டுள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்திற்கான நமது இந்தியத் தூதர், மருத்துவமனையில் கேப்டன் மச்சாரை நேரில் சந்தித்து அவரது உடல்நலக் குறைபாடு குறித்துக் கேட்டறிந்தார்.

முன்னதாக, அவர் கேப்டனின் குடும்பத்தினரையும் நேரில் சந்தித்து, அவரது விரைவான குணமடைதலுக்கும் நல்வாழ்விற்கும் தேவையான அனைத்துச் சாத்தியமான உதவிகளையும் வழங்குவதாக உறுதியளித்தார்.

அபுதாபியில் உள்ள நமது இந்தியத் தூதரகமும், துபாயில் உள்ள துணைத் தூதரகமும் இது தொடர்பாக உள்ளூர் அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளன.

கேப்டன் ஸ்மித் மச்சாரின் இணையற்ற வீரத்தையும் தைரியத்தையும் நாங்கள் மீண்டும் ஒருமுறை போற்றி வணங்குகிறோம்.

அவரது இந்தச் சாகசச் செயலுக்காக உலகெங்கிலும் இருந்து அவருக்குக் கிடைத்து வரும் பாராட்டுகளுக்கும் ஆதரவிற்கும் நமது ஆழ்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று கூறப்பட்டுள்ளது.

Bootstrap