2 முறை மரண ஊசி : பெண் உயிர் தப்பியது எப்படி ? ரத்தாகுமா மரண தண்டனை?

அமெரிக்காவின் டென்னசி (Tennessee) மாகாணத்தின் நாக்ஸ்வில் நகரில், 1995-ஆம் ஆண்டு 19 வயதான கொலீன் ஸ்லெம்மர் (Colleen Slemmer) என்ற இளம்பெண்ணை, கிறிஸ்டா பைக் (Christa Pike) என்ற 18 வயது இளம்பெண் தனது காதலரோடு சேர்ந்து சித்தரவதை செய்து கொலை செய்தார். இந்த வழக்கில் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையின் முடிவில் 1996-இல் கிறிஸ்டா பைக்கிற்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.

எனினும் அவரது வழக்கறிஞர்கள் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், அதன் மீதான வழக்கு தொடர்ந்து நடைபெற்றது. அந்த வழக்குகள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டு, தற்போது 50 வயதாகும் கிறிஸ்டா பைக்குக்கு கடந்த அக்டோபர் 1-ம் தேதி அன்று மரண தண்டனை நிறைவேற்ற உத்தரவிடப்பட்டது.

அதன்படி அவரின் உடல்நிலை சோதனை செய்யப்பட்டு, பென்டோபார்பிட்டால் என்ற மரண ஊசி மருந்தின் இரண்டு டோஸ்கள் செலுத்தப்பட்டன. அவர் சிறிது நேரத்தில் இறந்துவிடுவார் என கருதப்பட்ட நிலையில், ஆழ்ந்த உறக்கத்துக்கு சென்ற அவர் குறட்டை விட்டதாக கூறப்படுகிறது.

இதனால் மருந்து அவரின் உடலில் மரணத்துக்குரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதால் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவருக்கு தற்போது அவசர சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக அவரது வழக்கறிஞர் கூறியுள்ளார். விஷ ஊசி செலுத்தப்பட்ட நிலையில், ஒருவர் உயிர்பிழைத்தது உலகளவில் பரபரப்பான செய்தியாக மாறியுள்ளது.

அவருக்கு செலுத்தப்பட்ட பென்டோபார்பிட்டால் என்ற மருந்தின் வீரியம் மீது மருத்துவ நிபுணர்கள் ஏற்கனவே பல்வேறு சந்தேகங்களை கடந்த காலங்களில் எழுப்பியிருந்தனர். அதனை உறுதிப்படுத்தும் விதமாக இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளதன் மூலம் வரும் காலங்களில் மரண தண்டனையை நிறைவேற்ற வேறு மருந்து பயன்படுத்தப்பட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே இந்த சம்பவத்தைத் தொடர்ந்து டென்னசி மாகாண ஆளுநர் இந்த ஆண்டு மாகாணத்தில் நடைபெறவிருந்த அனைத்து மரண தண்டனைகளையும் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார். மேலும் கிறிஸ்டா பைக்கின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க வேண்டும் என்றும் பைக்கின் வழக்கறிஞர்கள் தற்போது கோரிக்கை விடுத்துள்ளார். இதனால் அவரது மரண தண்டனை ரத்தாகவும் வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது.

Bootstrap