ஃபிளைதுபாய் விமான சம்பவம் | விசாரணையில் வெளியான துணை விமானியின் பகீர் தகவல்கள்!

துபாயிலிருந்து டெல் அவிவ் (இஸ்ரேல்) சென்ற ஃபிளைதுபாய் விமானத்தில், இந்திய கேப்டன் ஸ்மித் மச்சாரை, ஓமன் நாட்டைச் சேர்ந்த துணை விமானி கத்தியால் குத்தி, விமானத்தைக் கீழே வீழ்த்த முயன்ற சம்பவம் உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கடுமையான காயமடைந்த நிலையிலும் கேப்டன் ஸ்மித் மச்சார் மன உறுதியுடன் போராடி, காக்பிட் (Cockpit) கதவைத் திறந்து, பயணிககளின் உதவியோடு தாக்குதல் நடத்தியவரை மடக்கிப் பிடித்து 180-க்கும் மேற்பட்ட பயணிகளின் உயிரைக் காப்பாற்றினார். இதையடுத்து, உலகத் தலைவர்கள் பலரும் அவரைப் பாராட்டி வருகின்றனர். அதேவேளையில் ஓமனின் துணை விமானி பற்றிய பல தகவல்கள் வெளியாகி வருகின்றன. கைது செய்யப்பட்ட அந்த ஓமன் துணை விமானி தற்போது சவூதி அரேபிய பாதுகாப்பு அமைப்புகளின் தீவிரக் காவலில் உள்ளார்.

அவர்களிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணைகளின்படி, அவர் தீவிரவாதக் கருத்துகளால் ஈர்க்கப்பட்டவர் (Radicalised) என்றும், இணையத்தில் யூதர்களுக்கு எதிரான வெறுப்புப் பரப்புரைகள் மற்றும் யூதர்களைக் கொல்வது தொடர்பாகப் பதிவிட்டு வந்தவர் என்றும் தெரியவந்துள்ளது. இதற்கிடையே, ஓமன் துணை விமானியுடன் பணியாற்றிய மற்றொரு விமானி, இஸ்ரேலிய தொலைக்காட்சியான Channel 16-க்கு அளித்த பேட்டி ஒன்றில், அவர் நாளின் பெரும்பாலான நேரங்களில் வழக்கத்திற்கு மாறாக அதிக முறை தொழுகை செய்து வந்ததாகவும், மத நெறிமுறைகளில் மிகவும் தீவிரமான போக்குடன் நடந்துகொண்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், அவர் பெண் ஊழியர்கள் மற்றும் பெண்களுடன் கை குலுக்குவதைத் தொடர்ந்து தவிர்த்து வந்ததாகவும், தனது பணிச்சூழலுக்கு ஒத்துவராத தீவிர மதக் கோட்பாடுகளைப் பின்பற்றி வந்ததாகவும் அதில் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, இச்சம்பவம் தொடர்பாக ஐக்கிய அரபு அமீரகம் (UAE) மற்றும் சவூதி அரேபிய புலனாய்வு அமைப்புகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றன.

Bootstrap