கணவர் வெளியில் எங்கேயும் செல்லாமல் வீட்டிலேயே இருக்க விரும்புவதால் மன உளைச்சலுக்கு ஆளான மனைவி ஒருவர், விவாகரத்து கோரி நீதிமன்றத்தை அணுகிய சம்பவம் ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஷார்ஜாவில் (Sharjah) இடம்பெற்றுள்ளது.
ஷார்ஜா நீதிமன்றங்களின் குடும்ப வழிகாட்டுதல் துறை பணிப்பாளர் மருத்துவர் ராதியா ஹசன் அல் ரைசி, தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் இந்த வழக்கைப் பற்றி விரிவாகப் பேசியுள்ளார்.
பாதிக்கப்பட்ட மனைவி, குடும்ப வழிகாட்டுதல் மையத்தை அணுகி தனது முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
அதில், தனது கணவர் பொழுதுபோக்கு இடங்களுக்கோ, சுற்றுலாவுக்கோ அல்லது வெளியில் உணவகங்களுக்கோ தன்னுடன் வர மறுப்பதாகவும், எப்போதும் வீட்டிலேயே இருக்க விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக கணவரிடமிருந்து விவாகரத்து பெற விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கைக் கையாண்ட குடும்ப வழிகாட்டுதல் துறை பணிப்பாளர் மருத்துவர் ராதியா, அந்த நபர் அன்பானவர், அமைதியானவர், சகிப்புத்தன்மை கொண்டவர் மற்றும் மனைவியை எந்த விதத்திலும் துன்புறுத்தாத நற்குணங்கள் கொண்டவர் என்பதைச் சுட்டிக்காட்டினார்.
வெளிப்புற பயணங்களில் விருப்பமில்லாத இந்த ஒரு வேறுபாட்டை மட்டும் வைத்துக்கொண்டு திருமண வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டாம் என்று அந்தப் பெண்ணுக்கு அறிவுறுத்தப்பட்டது.
கணவர் வர விரும்பாத பட்சத்தில், மனைவி தனது குழந்தைகள், பெற்றோர் அல்லது உடன்பிறந்தவர்களுடன் வெளியில் சென்று நேரத்தைச் செலவிடலாம் என்றும், வாழ்க்கைத் துணையின் நற்குணங்களை நேர்மறையாகப் பார்க்க வேண்டும் என்றும் குடும்ப வழிகாட்டுதல் மையம் அவருக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.
இத்தகைய சிறிய வாழ்க்கை முறை வேறுபாடுகளை நீதிமன்ற வழக்குகளாக மாற்றாமல், குடும்ப அமைதியைப் பாதுகாக்க விட்டுக்கொடுத்து வாழ வேண்டும் என்று அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.