அனு ஆயுத தயாரிப்பில் ஈடுபடுவதாக கூறி, ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து கூட்டுத் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை தொடர்ந்து, ஈரானும் பதில் தாக்குதல் நடத்தியதால், இருதரப்புக்கும் இடையே, போர் தொடங்கியது. கடந்த பிப்ரவரி மாதம் முதல் தற்போது வரை நடந்து வரும் போரால், உலக அளவில் இயற்கை எரிவாயு தட்டுப்பாடு மிகப்பெரிய அளவில் அதிகரித்து, பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இருப்பினும், இந்த போர் இன்னும் முடிந்தபாடில்லை.
இந்த நிலையில், 10 ஆயிரம் போர் வீரர்களையும், விமானம் தாங்கி போர் கப்பல்களையும், மத்திய கிழக்கு பகுதிக்கு அமெரிக்கா அனுப்ப இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, USS George H.W. Bush மற்றும் USS George Washington ஆகிய இரண்டு அமெரிக்க விமானந்தாங்கி போர்க்கப்பல்கள், மத்திய கிழக்கு பகுதிக்கு ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தற்போது, USS Theodore Roosevelt என்ற 3-வது விமானம் தாங்கி போர் கப்பலையும், 10 ஆயிரம் பேர் வரையிலான போர் வீரர்களையும், அமெரிக்கா அனுப்ப உள்ளதாம். இந்த புதிய படைப்பிரிவு, வரும் நவம்பர் மாத இறுதிக்குள் மத்திய கிழக்கை அடையும் என்றும், புதிய படை நகர்வு திட்டமிட்டபடி நடைபெற்றால், மத்திய கிழக்கில் அமெரிக்க கடற்படையினர் எண்ணிக்கை 20 ஆயிரத்தைத் தாண்டும் என்றும் கூறப்படுகிறது.
நூற்றுக்கணக்கான போர் விமானங்களும் அங்கு இருக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே, ஈரான் முன்வைத்ததாக கூறப்படும் சமாதான முன்மொழிவை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிராகரித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தின்போது, கத்தார் மூலம் அமெரிக்காவிடம் ஈரான் இந்த முன்மொழிவை வழங்கியதாக கூறப்படுகிறது. ஆனால், இந்த முன்மொழிவை டிரம்ப் ஏற்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நவம்பர் 3-ம் தேதிக்குப் பிறகு ஈரானுக்கு எதிராக புதிய தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்றும் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே, துபாயிலிருந்து டெல் அவிவ் சென்ற flydubai விமானத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவமும் இந்த விவகாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கும் ஈரானுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று செய்தியாளர்களிடம் கூறியுள்ள டிரம்ப், ஆனால் விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், இந்த சம்பவத்தில் ஈரானின் தொடர்பு உறுதி செய்யப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.