யாழ். பல்கலையின் 41ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா 6ஆம் திகதி ஆரம்பம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 41ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா எதிர்வரும் 6ஆம் திகதி முதல் 8ஆம் திகதி வரை மூன்று நாள்களுக்கு, ஒன்பது அமர்வுகளாக பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.

பட்டமளிப்பு விழா தொடர்பான ஊடக விளக்கக் கூட்டம் நேற்று (3) யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் தி. வேல்நம்பி தலைமையில் பல்கலைக்கழக சபை அறையில் நடைபெற்றது.

இம்முறை பட்டமளிப்பு விழாவில் பல்கலைக்கழகத்தின் பல்வேறு பீடங்களைச் சேர்ந்த 2,680 உள்வாரி மாணவர்கள், 417 வெளிவாரி மாணவர்கள் மற்றும் 314 பட்டப்பின் தகைமை பெற்றவர்கள் என பெருமளவானோர் பட்டங்களைப் பெறவுள்ளனர்.

இதன்போது 10 உயர் தகைமை மற்றும் தகைமைச் சான்றிதழ்களும், தொழில்சார் ஆங்கிலத்தில் 24 தகைமைச் சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன.

உயர் பட்டப்படிப்புகள் பீடத்தைச் சேர்ந்த 314 பேரில், நால்வர் கலாநிதிப் பட்டத்தையும், 8 பேர் முதுமெய்யியல்மாணிப் பட்டத்தையும் பெறவுள்ளனர்.

கல்வியில் முதுமாணிப் பட்டத்தை 193 பேரும், வியாபார நிர்வாகத்தில் முதுமாணிப் பட்டத்தை 29 பேரும் உள்ளிட்ட பல்வேறு உயர் தகைமைகளையும் பட்டதாரிகள் பெற்றுக்கொள்ளவுள்ளனர்.

மேலும், மருத்துவம், கலை, விஞ்ஞானம், விவசாயம், முகாமைத்துவம் மற்றும் வணிகம், தொழில்நுட்பம், பொறியியல், இந்துக் கற்கைகள், சித்த மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு பீடங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும் பட்டங்கள் வழங்கப்படவுள்ளன.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னைய வவுனியா வளாகத்தைச் சேர்ந்த வியாபாரக் கற்கைகள், பிரயோக விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பக் கற்கைகள் பீடங்களின் பட்டதாரிகளும் இப்பட்டமளிப்பு விழாவில் பட்டங்களைப் பெறவுள்ளனர்.

அத்துடன், திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தின் ஊடாக கற்கைநெறிகளை நிறைவு செய்த மாணவர்களுக்கும் பட்டங்கள் வழங்கப்படவுள்ளன.

இம்முறை பட்டமளிப்பு விழாவில் சகல பட்டக் கற்கை நெறிகளுக்குமாக 100 தங்கப்பதக்கங்கள், 63 பரிசில்கள் மற்றும் 15 புலமைப்பரிசில்கள் வழங்கப்படவுள்ளன.

பல்கலைக்கழகத்தின் உயர் விருதான பேராசிரியர் அழகையா துரைராசா தங்கப் பதக்கங்களும் பல்வேறு கல்வியாண்டுகளுக்காக வழங்கப்படவுள்ளது.

அத்துடன், தூய மற்றும் பிரயோக விஞ்ஞானத்தில் சிறந்த செயலாற்றுகைக்கான பேராசிரியர் கந்தையா குணரட்ணம் தங்கப் பதக்கமும் வழங்கப்படவுள்ளது.

இதனையடுத்து, பட்டமளிப்புக்கு பின்னரான கலை, கலாசார நிகழ்வுகள் எதிர்வரும் 10ஆம் திகதி மாலை 3 மணிக்கு பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நடைபெறவுள்ளன.

மேலும், சேர். பொன் இராமநாதன் நினைவுப் பேருரை மற்றும் சீமாட்டி லீலாவதி இராமநாதன் நினைவுப் பேருரை ஆகியனவும் எதிர்வரும் 15ஆம் திகதி கைலாசபதி கலையரங்கில் நடைபெறவுள்ளன.

Bootstrap