வெளிநாட்டினர் முதலீடு செய்தால் அர்ஜென்டினா குடியுரிமை!

வெளிநாட்டினர் முதலீடு செய்வதன் மூலம் அர்ஜென்டினா குடியுரிமையை பெற்றுக்கொள்ளும் வகையில் புதிய ‘தங்க பாஸ்போர்ட்’ திட்டத்தை அந்நாட்டு அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதுடன், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்ற ‘அர்ஜென்டினா வாரம்’ என்ற வணிக நிகழ்வில் பொருளாதார அமைச்சர் லூயிஸ் கபுடோ மற்றும் அமைச்சரவைத் தலைவர் டியேகோ சாண்டில்லி ஆகியோர் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

இதன்படி, வெளிநாட்டவர்கள் அர்ஜென்டினா குடியுரிமையைப் பெற இரண்டு வழிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. முதலாவது, அந்நாட்டின் தேசிய கருவூலத்திற்கு சுமார் 350,000 அமெரிக்க டொலர்கள், அதாவது இலங்கை மதிப்பில் சுமார் 3.37 கோடி ரூபாய் திருப்பிச் செலுத்தப்படாத நிதியுதவியாக வழங்க வேண்டும்.

இரண்டாவது, அர்ஜென்டினா அரச பத்திரங்களில் சுமார் 800,000 அமெரிக்க டொலர்கள், அதாவது சுமார் 7.70 கோடி ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். இந்த முதலீட்டை 7 ஆண்டுகளுக்கு மீளப் பெற முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பிரதான விண்ணப்பதாரருடன் அவரது மனைவி மற்றும் பிள்ளைகளையும் அர்ஜென்டினாவுக்கு அழைத்துச் செல்வதற்கான வசதியும் இந்தத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது. இதற்காக மேலதிக கட்டணம் செலுத்த வேண்டும்.

இந்தத் திட்டத்திற்கான விண்ணப்பப் பதிவுகள் மற்றும் உத்தியோகபூர்வ நடைமுறைகள் இந்த ஆண்டு இறுதிக்குள் ஆரம்பிக்கப்படும் என அர்ஜென்டினா அரசு அறிவித்துள்ளது.

Bootstrap