தலைநகர் நோக்கி படையெடுக்கும் இம்ரான் கானின் ஆதரவாளர்கள்!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் எதிர்க்கட்சித் தலைவருமான இம்ரான் கானை சிறையிலிருந்து உடனடியாக விடுதலை செய்யக் கோரியும், அவருக்கு முறையான மருத்துவச் சிகிச்சை அளிக்க வலியுறுத்தியும் பல்லாயிரக்கணக்கான அவரது ஆதரவாளர்கள் தலைநகர் இஸ்லாமாபாத்தை நோக்கி பிரம்மாண்ட பேரணியை மேற்கொண்டு வருகின்றனர்.

73 வயதான இம்ரான் கானுக்கு சிறை அதிகாரிகளால் உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படாததால், அவரது வலது கண்ணின் பார்வைத்திறன் பெரும்பாலான பகுதியை அவர் இழந்துவிட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

100க்கும் மேற்பட்ட வழக்குகளை எதிர்நோக்கியுள்ள இம்ரான் கான், கடந்த ஆண்டு ஊழல் வழக்கில் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இருப்பினும், தன் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளும் அரசியல் பழிவாங்கும் நோக்கம் கொண்டவை என அவர் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமாபாத்திலிருந்து சுமார் 275 கிலோமீற்றர் தொலைவில் உள்ள லக்கி மார்வாட் (Lakki Marwat) நகரில் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பேரணி, இரவில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு திங்கட்கிழமை நண்பகல் மீண்டும் தொடரவுள்ளது.

அரசாங்கத்துக்கும் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-ஈ-இன்சாஃப் (PTI) கட்சிக்கும் இடையிலான பேச்சுவார்த்தை முட்டுக்கட்டையில் முடிந்ததையடுத்து, திட்டமிட்டபடி பேரணி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இம்ரான் கானைச் சந்தித்து அரசியல் ஆலோசனைகளை நடத்தவும், அவருக்கு உடனடியாகத் தனியார் மருத்துவமனையில் உரிய மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கவும் அரசு அனுமதி மறுத்ததே பேச்சுவார்த்தை தோல்வியடைந்தற்குக் காரணம் என தெஹ்ரீக்-ஈ-இன்சாஃப் கட்சி தெரிவித்துள்ளது.

அதேவேளை, கைபர் பக்துன்க்வா மாகாண முதல்வர் சொஹைல் அப்ரிடி பேச்சுவார்த்தையை முடக்கிவிட்டதாக பாகிஸ்தான் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் மொஹ்சின் நக்வி குற்றம்சாட்டியுள்ளார்.

எதிர்வரும் வியாழக்கிழமைக்குள் பேரணி இஸ்லாமாபாத்துக்கு அருகில் சென்றடையும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், போராட்டக்காரர்கள் தலைநகருக்குள் நுழைவதைத் தடுப்பதற்காகப் பிரதான பாதைகளில் கப்பல் கொள்கலன்களைப் (Shipping Containers) பயன்படுத்திப் பாதுகாப்புப் படையினர் பலத்த தடைகளை ஏற்படுத்தியுள்ளனர்.

Bootstrap