ரஷ்யாவைத் தடுக்காவிட்டால் போர் எங்களுக்கும் திரும்பும் - ஜெர்மன் பிரதமர் எச்சரிக்கை

ரஷ்யா - உக்ரைன் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், உக்ரைனுக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாக ஜெர்மன் பிரதமர் பிரடெரிக் மெர்ஸ் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் தலைநகர் கீவுக்கு நேற்று சென்ற ஜெர்மன் பிரதமர், அந்நாட்டு ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலன்ஸ்கியை சந்தித்து போரின் நிலவரம் மற்றும் இரு நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பு குறித்து கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது கருத்து தெரிவித்த மெர்ஸ், ரஷ்யாவைத் தடுக்காவிட்டால், அந்நாட்டின் போர் இயந்திரம் காலப்போக்கில் தங்களுக்கு எதிராகவும் திரும்பக்கூடும் என எச்சரித்துள்ளார்.

ரஷ்ய தாக்குதல்களுக்கு எதிராக உக்ரைனுக்கு தொடர்ந்து உதவிகளை வழங்க ஜெர்மனி உறுதியுடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் போர் தொடங்கியதிலிருந்து அந்நாட்டுக்கு அதிகளவில் இராணுவ உதவிகளை வழங்கிய நாடுகளில் ஜெர்மனியும் ஒன்றாகும். இதுவரை சுமார் 48.8 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான ஆயுதங்கள் மற்றும் இராணுவ தளவாடங்களை ஜெர்மனி உக்ரைனுக்கு வழங்கியுள்ளது.

ஜெர்மனியின் தொடர்ச்சியான ஆதரவுக்கு நன்றி தெரிவித்த ஜெலன்ஸ்கி, ரஷ்யாவை எதிர்கொள்வதற்கு இரு நாடுகளும் இணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.

Bootstrap