பிரான்ஸ் முழுவதும் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் மோசமான உட்கட்டமைப்பு வசதிகளைக் கண்டித்து மாணவர்கள் நடத்தி வரும் தொடர் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள 3,700 உயர்நிலைப் பாடசாலைகளில் 400க்கும் மேற்பட்ட பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. குறிப்பாக பாரிஸ் பிராந்தியத்தில் உள்ள பாடசாலைகளில் மூன்றில் ஒரு பங்கு மூடப்பட்டு, மாணவர்களுக்குப் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மாணவர்களின் இந்தப் போராட்டம் சில இடங்களில் வன்முறையாகவும் மாறியுள்ளது. குப்பைத் தொட்டிகளுக்குத் தீ வைத்தல், பேருந்து நிறுத்தங்களைச் சேதப்படுத்துதல் மற்றும் பொலிஸாருடன் மோதல்களில் ஈடுபடுதல் போன்ற சம்பவங்களால் பல பாடசாலைகள் சேதமடைந்துள்ளன.
நிலைமையைக் கட்டுப்படுத்தக் பொலிஸார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளைப் பயன்படுத்தியுள்ளனர். இப்போராட்டங்களின் போது ஏற்பட்ட மோதல்களில் இதுவரை பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு கல்வி அமைச்சகம் கடுமையான எச்சரிக்கைகளை விடுத்துள்ளதுடன், சேதமடைந்த மற்றும் முற்றுகையிடப்பட்ட கல்வி நிலையங்களுக்கு ஒன்லைன் வகுப்புகளுக்கு மாறுமாறு உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையில், பொலிஸாரின் செயற்பாடு குறித்து மனித உரிமை அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளதுடன் அரசு தரப்பில் முறையான விசாரணைகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.