சவூதி கூட்டுப்படைகளின் தீவிர வான்வழி தாக்குதல்: துபாப் மாவட்டத்தின் பெரும்பகுதி அரசுப் படைகள் வசம்!

சவூதி அரேபியாவின் ஆதரவுடன் செயற்படும் யேமன் அரசுப் படைகள், இன்று (05) Bab el-Mandeb நீரிணைப் பகுதியில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த சில பகுதிகளைக் கைப்பற்றியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சவூதி தலைமையிலான கூட்டுப்படைகளின் தீவிர வான்வழித் தாக்குதல் ஆதரவுடன், Bab el-Mandeb நீரிணைக்கு அருகிலுள்ள துபாப் மாவட்டத்தின் பெரும்பகுதியை அரசுப் படைகள் கைப்பற்றியுள்ளதாக இராணுவ மற்றும் அரசாங்கத் தரப்புகளை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அத்துடன், குறித்த பகுதியில் தமது முழுமையான கட்டுப்பாட்டை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளில் அரசுப் படைகள் ஈடுபட்டு வருவதாக மூன்று இராணுவத் தரப்பினரும், ஒரு அரசாங்கத் தரப்பினரும் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், அரசுப் படைகள் குறித்த பகுதியில் முன்னேற்றம் கண்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்களை ஹூதி அமைப்புக்கு ஆதரவான ஊடகங்கள் முன்னதாக மறுத்திருந்தன.

அமெரிக்கா – ஈரான் மோதலின் தாக்கத்தால் தற்காலிகமாகத் தணிந்திருந்த யேமன் உள்நாட்டுப் போர் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த சில வாரங்களாக பல முக்கிய முனைகளில் கடுமையான மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.

இதன்போது, முக்கியத்துவம் வாய்ந்த Bab el-Mandeb நீரிணையின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற ஹூதி அமைப்பு முயற்சித்து வருவதுடன், சவூதி அரேபிய நகரங்கள் மற்றும் உட்கட்டமைப்புகளை இலக்காகக் கொண்டு ஏவுகணை மற்றும் ஆளில்லா வானூர்தித் தாக்குதல்களையும் நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, ஈரான் ஹோர்முஸ் நீரிணையை மூடியுள்ளதால் வளைகுடா பிராந்தியத்தின் எரிசக்தி ஏற்றுமதிகள் பாதிக்கப்பட்டுள்ள பின்னணியில், யேமனில் இடம்பெறும் இந்த மோதல்கள் மற்றுமொரு முக்கிய எண்ணெய் வர்த்தகப் பாதைக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளன.

இதன் காரணமாக உலக சந்தையில் எண்ணெய் விலை மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதுடன், ஏற்கனவே பதற்றமான நிலையில் உள்ள பிராந்தியத்தின் பாதுகாப்பு நிலைமையும் மேலும் மோசமடையக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.

Bootstrap