செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் துரித வளர்ச்சிக்கு உலக நாடுகள் மற்றும் நிறுவனங்கள் உடனடியாகக் கடுமையான கட்டுப்பாடுகளை (Guardrails) விதிக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் (Volker Türk) எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தில் அவர் இதனை தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், அதிநவீன மற்றும் கணிக்க முடியாத அளவுக்கு வளரும் ஏஐ (Advanced/Agentic AI) அமைப்புகள் மனிதகுலத்திற்கு நேரடி இருத்தலியல் அச்சுறுத்தலாக (Existential Threat) மாறக்கூடும் என்று தெரிவித்தார்.
தனியுரிமை, சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் அடிப்படை மனித உரிமைகள் போன்ற பல அம்சங்கள் துரித வளர்ந்து வரும் ஏஐ தொழில்நுட்பத்தால் கடுமையான ஆபத்தை எதிர்கொள்வதாக அவர் சுட்டிக்காட்டினார்.
தொழில்நுட்ப வளர்ச்சி என்ற பெயரில் மிகச் சில சக்திவாய்ந்த பெருநிறுவனங்கள் மட்டுமே உலகளாவிய முடிவுகளை எடுப்பதை ஏற்க முடியாது எனவும், உலக நாடுகளும் நிறுவனங்களும் இணைந்து இதற்கான எல்லைக்கோாடுகளை (Red Lines) உடனடியாக வகுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.