ஏமன் மோதல் எதிரொலி: 1.84 இலட்சத்திற்கும் அதிகமானோர் இடபெயர்வு

ஏமன் நாட்டில் சமீபத்தில் தீவிரமடைந்துள்ள மோதல்கள் காரணமாக கடந்த ஓகஸ்ட் மாதத் தொடக்கத்திலிருந்து இதுவரை 1,84,000 க்கும் அதிகமான மக்கள் தங்கள் சொந்த இடங்களை விட்டு வெளியேறிவிட்டதாக ஐ.நா.வின் இடம்பெயர்வுக்கான அமைப்பு (IOM) கவலை தெரிவித்துள்ளது.

இதனால் அப்பகுதியில் கடுமையான மனிதாபிமான நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் இடம்பெயர்வுக்கான அமைப்பின் (IOM) தரவுகளின்படி, கடந்த ஓகஸ்ட் 1 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 4ஆம் திகதி வரையிலான குறுகிய காலக்கட்டத்தில் மட்டும் 184,000 க்கும் அதிகமான மக்கள் தங்கள் சொந்த வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களை நோக்கித் தப்பியோடியுள்ளனர்.

இவர்களில் பெரும்பாலானோர் செப்டம்பர் மாதத் தொடக்கத்திற்குப் பின்னரே இடம்பெயர்ந்துள்ளனர்.

ஏமன் நாட்டில் ஏற்பட்டுள்ள மோதல்களால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் காலரா மற்றும் தட்டம்மை (Measles) போன்ற நோய்கள் வேகமாகப் பரவி வருவதாக ஐ.நா.கவலை தெரிவித்துள்ளது.

குறிப்பாக, காயமடையும் நபர்களுக்கு உரிய நேரத்தில் மருத்துவ உதவிகளை வழங்கும் முக்கியமான கட்டத்தில் உதவிகளைக் கொண்டு சேர்ப்பதில் நிவாரணக் குழுக்களுக்குப் பெரும் சவால்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர் மோதல்களால் ஏமன் மக்கள் மீள முடியாத துயரச் சுழலில் சிக்கியுள்ளதாக ஐ.நா. இடம்பெயர்வு அமைப்பின் இயக்குநர் ஜெனரல் அமி போப் (Amy Pope) தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு அவசர கால கூடாரங்கள், சுத்தமான குடிநீர் போன்ற அத்தியாவசிய உதவிகளை வழங்க மனிதாபிமான அமைப்புகள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும், சர்வதேச சமூகம் உடனடியாகத் தலையிட்டு உதவ வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Bootstrap