இந்தியாவின் மிக சக்திவாய்ந்த ஏவுகணைகளில் ஒன்றாக இருப்பது பிரம்மோஸ் தான். இந்த ஏவுகணை, இந்திய பாதுகாப்புத்துறையில் ஒரு பெரிய மைல்கல் என்றும் சொல்ல முடியும். குறிப்பாக, இந்தியாவின் இந்த ஏவுகணையை பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, வியட்நாம் போன்ற நாடுகள், போட்டி போட்டி வாங்கி, தங்களது ராணுவ பலத்தை உயர்த்தி வருகின்றனர். இப்படியான சூழ்நிலையில், இந்தியாவின் இந்த பிரம்மோஸ் ஏவுகணையை விட, இரு மடங்கு வேகம் கொண்ட மற்றொரு ஏவுகணை உருவாகியுள்ளது. ஜப்பான் உருவாக்கியுள்ள இந்த புதிய ஏவுகணையால், சீனாவுக்கு ஆபத்து வரலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
அதாவது, சீனாவின் கடற்படை நடவடிக்கைகளை எதிர்கொள்ள, டைப் 25 ஹைப்பர்வெலாசிட்டி கிளைடிங் ப்ரஜெக்டைல் என்ற ஏவுகணையை, ஜப்பான் அறிமுகப்படுத்தியுள்ளது. ஃபுஜி முகாமில் தான், இந்த புதிய அதிவேக ஏவுகணை செயல்பாட்டில் இருப்பது வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த கிளைடிங் ஏவுகணையின் துல்லியமான தாக்குதல் வரம்பை ஜப்பானிய அதிகாரிகள் இன்னும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. இந்த ஆயுதம், மணிக்கு 6 ஆயிரத்து 200 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டது என்றும், இந்த வேகத்தில் சென்றால், ஜப்பானில் இருந்து பெய்ஜிங் நகரை வெறும் 20 நிமிடங்களில் சென்றடைய முடியும் என்றும் கூறப்படுகிறது.
இது சீனாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாகப் பார்க்கப்படுகிறது. இவ்வளவு அதிவேகத்தில் வரும் ஏவுகணையைத் தடுத்து நிறுத்துவது எந்தவொரு வான் பாதுகாப்பு அமைப்புக்கும் சவாலான காரியமாக இருக்கும். இந்த அதிவேக கிளைடிங் ஏவுகணைகள் மூலம், ஜப்பான் தனது சொந்த போர் விமானங்கள், போர்க்கப்பல்கள் அல்லது நீர்மூழ்கிக் கப்பல்களை ஆபத்தில் ஆழ்த்தாமல், ஆக்கிரமிக்கும் எதிரி போர்க்கப்பல்களையும் விமான தளங்களையும் தாக்க முடியும்.
இதன் மூலம், சீனா, ரஷ்யா, வடகொரியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்குப் பிறகு, ஹைப்பர்சோனிக் கிளைடிங் வாகனத்தை சேவையில் ஈடுபடுத்திய ஐந்தாவது நாடாக ஜப்பான் தற்போது உருவெடுத்துள்ளது. சீனாவின் கடற்படை மற்றும் வான்படை பலம் ஜப்பானுக்கு பெரிய சவாலாக மாறிவரும் காலகட்டத்தில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது, என்பது குறிப்பிடத்தக்கது.