அமெரிக்காவின் கோரிக்கைகளை பூர்த்தி செய்து, இரு நாடுகளுக்குமிடையிலான ஏழு மாத போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமாயின், ஈரான் தனது அணுச்செறிவூட்டல் திறனில் குறிப்பிடத்தக்க குறைப்பைச் செய்ய வேண்டும் என அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் (JD Vance) தெரிவித்துள்ளார்.
ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவைக்கு வழங்கிய செவ்வி ஒன்றிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் பேச்சுவார்த்தைகளில் ஈரான் எவ்வாறு முடிவுகளை எடுக்கிறது என்பது குறித்து அமெரிக்கா இன்னும் உறுதியற்ற நிலையிலேயே உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
வெளிநாட்டுப் போர்களில் அமெரிக்கா ஈடுபடுவதை நீண்டகாலமாக எதிர்த்து வரும் வான்ஸ், இந்த மோதலுக்குத் தீர்வு காண்பதற்கான பேச்சுவார்த்தைகளில் முன்னணிப் பாத்திரத்தை வகித்துள்ளார்.
அத்துடன், ஜூன் மாதத்தில் அவர் இடைக்கால அமைதி ஒப்பந்தம் ஒன்றையும் ஏற்படுத்தியிருந்தார்.
எனினும் அது விரைவிலேயே முறிவடைந்தது. இந்தப் போர் உலகளாவிய எரிசக்தி சந்தைகளை உலுக்கியுள்ளதோடு, நவம்பர் இடைக்காலத் தேர்தலுக்கு முன்னதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் சக குடியரசுக் கட்சியினருக்கு அரசியல் ரீதியான ஒரு பின்னடைவாகவும் மாறியுள்ளது.
அலாஸ்காவிற்கான தேர்தல் பிரச்சாரப் பயணத்திற்குப் பிறகு திங்கள்கிழமை பேசிய வான்ஸ், எதிர்காலத்தில் அணுஆயுதக் குறைப்புச் செய்யப்படும் என்ற உறுதியை அளிப்பதை விட, எந்தவொரு ஒப்பந்தத்திற்கும் ஈரான் தனது அணுச்செறிவூட்டல் திறனைக் குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
உங்களுக்கு அணுஆயுதம் தேவையில்லை என்றால், 60% செறிவூட்டப்பட்ட எரிபொருள் ஏன் தேவைப்படுகிறது? அணுஆயுதத்தைத் தயாரிக்க மாட்டோம் என்ற அர்ப்பணிப்பைக் காட்ட விரும்பினால், அதிகளவில் செறிவூட்டப்பட்ட எரிபொருளைத் தயாரிக்காதீர்கள். இது மிகவும் அடிப்படையான ஒரு முக்கிய விடயமாகும் என வான்ஸ் குறிப்பிட்டுள்ளார்.