சீனாவின் யுனான் மாகாணத்திலுள்ள குன்மிங் பகுதியில் மின்கம்பிகளை ஆய்வு செய்வதற்காக பாம்பு வடிவிலான புதிய ரோபோ ஒன்று பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
மின்கம்பிகளைச் சுற்றிப் பிடித்துக்கொண்டு நெகிழ்வுத் தன்மையுடன் ஊர்ந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ரோபோவில் கெமராக்கள் மற்றும் சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இதன் மூலம் மின்கம்பிகளில் ஏற்படும் சேதங்கள், பாகங்களின் தேய்மானம் மற்றும் அதிக வெப்பம் போன்ற பழுதுகளை முன்கூட்டியே கண்டறிய முடியும்.
ஆளில்லா வானூர்திகளைப் பயன்படுத்த முடியாத வானூர்தி நிலையப் பகுதிகள் மற்றும் மோசமான வானிலை நிலவும் சூழல்களிலும் இந்த ரோபோ வினைத்திறனுடன் இயங்கக்கூடியது.
மேலும், மனிதர்களை விட சுமார் 3 மடங்கு வேகமாகவும் ஆபத்தான இடங்களிலும் ஆய்வு செய்யும் திறன் கொண்ட இந்த தொழில்நுட்பம், எதிர்காலத்தில் மின் விநியோகத்தை தடையின்றிப் பேண பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.