சிவராசா அனோஜன் சிறையில் தாக்கப்பட்டாரா? வெளியான திடுக்கிடும் தகவல்கள்

சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள இலங்கைப் பிரஜையான சிவராசா அனோஜன் சிறைச்சாலையில் தாக்கப்பட்டதாக வெளியான தகவல்கள் தொடர்பில் முரண்பட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

அனோஜன் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு தலையில் காயம் ஏற்பட்டதாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

எனினும், சவூதி சிறைச்சாலை அதிகாரிகளிடமிருந்து கிடைத்த தகவலின்படி, அனோஜனுக்கும் மற்றொரு கைதிக்கும் இடையில் முதலில் வாய்த்தகராறு ஏற்பட்டு, பின்னர் அது மோதலாக மாறியதாக வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த மோதலின்போது அனோஜனின் முகம் மற்றும் உடலில் கீறல் காயங்கள் ஏற்பட்டதாகவும், அவை மற்றைய கைதியின் விரல் நகங்களால் ஏற்பட்டவை என சிறைச்சாலை மருத்துவர் தெரிவித்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், கத்தி அல்லது வேறு எந்த கூர்மையான ஆயுதமும் பயன்படுத்தப்படவில்லை எனவும் சவுதி சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக அவர் கூறினார்.

அனோஜனின் உயிருக்கு தற்போது அடையாளம் காணப்பட்ட எந்தவொரு அச்சுறுத்தலும் இல்லை எனவும், அவரது பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் சவூதி அதிகாரிகள் இலங்கை தூதரகத்துக்கு உறுதியளித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து அனோஜன் வேறு சிறைக்கூடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, அனோஜனின் உடல்நிலையை நேரடியாக பார்வையிட இலங்கை தூதரக அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை எனவும் அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இதனால், அவரது உடல்நிலை தொடர்பான தகவல்கள் சிறைச்சாலை மருத்துவர் மற்றும் அதிகாரிகள் வழங்கிய தகவல்களின் அடிப்படையிலேயே இலங்கை அரசாங்கத்துக்கு கிடைத்துள்ளதாகவும் அவர் விளக்கமளித்தார்.

Bootstrap