ஈரானின் உயர்மட்ட தலைவர்கள் பலர் கொல்லப்பட்டுள்ள நிலையில், தற்போது அந்த நாட்டை உண்மையில் யார் வழிநடத்துகிறார்கள் என்பதே தெளிவாக தெரியவில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரானின் தற்போதைய தலைமை குறித்து ட்ரம்ப் எழுப்பிய கேள்விகள் சர்வதேச அளவில் பேசுபொருளாகியுள்ளன.
இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த ட்ரம்ப், ஈரானின் தலைவர்கள் போய்விட்டார்கள். அவர்களுக்கு அடுத்த நிலையில் இருந்த தலைவர்களும் போய்விட்டார்கள்.தற்போது அந்த நாட்டை உண்மையில் யார் வழிநடத்துகிறார்கள் என்பதே தெளிவாக தெரியவில்லை என கூறினார்.
அத்துடன், எனக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்சினை என்னவென்றால், இந்த நாட்டை யார் நடத்துகிறார்கள் என்பது யாருக்கும் தெரியவில்லை என்று ட்ரம்ப் கூறினார்.
அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது நடத்திய தாக்குதலில் ஈரானின் அப்போதைய உச்சத் தலைவரான அயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். அவருடன் அவரது குடும்ப உறுப்பினர்கள் சிலரும் உயிரிழந்தனர்.
அலி கமேனியின் மரணத்துக்குப் பிறகு, அவரது மகன் மொஜ்தபா கமேனி ஈரானின் புதிய உச்சத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், புதிய உச்சத் தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு மொஜ்தபா காமேனி இதுவரை பொதுமக்கள் முன்னிலையில் தோன்றவில்லை.
தாக்குதலில் அவர் காயமடைந்ததாகவும், அவரது உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், ஈரானின் தலைமை குறித்து ஏற்கனவே பல்வேறு கேள்விகளும் கருத்துகளும் எழுந்து வரும் நிலையில், டிரம்பின் இந்தக் கருத்து தற்போது கூடுதல் கவனம் பெற்றுள்ளது.