சவூதி அரேபியாவின் ரியாத் மற்றும் அப்ஹா (Abha) சர்வதேச வானூர்தி நிலையங்களை இலக்கு வைத்து யேமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதல்களில் வெளிநாட்டவர்கள் மூவர் உயிரிழந்துள்ளதுடன், 36 பேர் காயமடைந்துள்ளதாகச் சவூதி சிவில் வானூர்தி போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதல்களுக்கு ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் உரிமை கோரியுள்ளனர்.
ரியாத்தில் உள்ள மன்னர் காலித் சர்வதேச வானூர்தி நிலையத்தை நோக்கியும் பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
அப்ஹா சர்வதேச வானூர்தி நிலையத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் மொரோக்கோ மற்றும் அல்ஜீரியாவைச் சேர்ந்த இரு பெண்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், ரியாத் வானூர்தி நிலையத் தாக்குதலில் சூடான் நாட்டவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இரு இடங்களிலும் இடம்பெற்ற தாக்குதல்களில் மொத்தம் 36 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த தாக்குதல்களைத் தொடர்ந்து, சவூதி அரேபியாவில் உள்ள அமெரிக்கக் தூதரகம் அந்த நாட்டில் வசிக்கும் அமெரிக்கப் பிரஜைகளுக்குப் பாதுகாப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளதுடன், மிகுந்த விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.