மொன்டானா தேசிய காவற் படையின் State Partnership Program நிகழ்ச்சித்திட்டத்தினூடாக பாதுகாப்பு ஒத்துழைப்பினை ஆழப்படுத்துவதற்காகவும், அமெரிக்க விவசாய ஏற்றுமதிகளுக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்காகவும், மொன்டானா மாநில தூதுக்குழுவொன்றுடனும், முதற்பெண்மணி சூசன் ஜியன்ஃபோர்ட்டே உடனும் மொன்டானா மாநில ஆளுநர் கிரெக் ஜியன்ஃபோர்ட்டே அவர்கள் ஒக்டோபர் மாதம் 09 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்வார்.
அமெரிக்காவின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள மொன்டானா மாநிலமானது, பரந்து விரிந்த நிலப்பரப்புகள், வளமான விவசாய நிலங்கள் மற்றும் ரொக்கி மலைச் சிகரங்களுக்குப் பெயர் பெற்றதாகும். கொண்டைக்கடலை, பருப்பு வகைகள் மற்றும் உலர்ந்த பட்டாணி போன்ற பயறு வகைகளின் முன்னணி அமெரிக்க உற்பத்தியாளராக மொன்டானா மாநிலம் விளங்குகிறது. மொன்டானாவில் விளைவிக்கப்படும் பொருட்களுக்கான புதிய சந்தைகளை ஆராய்வதற்காகவும், அமெரிக்க விவசாயிகளுக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்காகவும், இலங்கை வணிகங்களுடனான வர்த்தக உறவுகளைப் பலப்படுத்துவதற்காகவும், இலங்கைக்கு பருப்பு வகைகளை இறக்குமதி செய்பவர்களையும், வர்த்தகர்களையும் சந்தித்து கலந்துரையாடுவதற்கு இத்தூதுக்குழு திட்டமிட்டுள்ளது.
“மொன்டானாவின் பண்ணைகளிலிருந்து இலங்கையின் இந்து சமுத்திர கரைகள் வரை இப்பங்காண்மையானது, பகிரப்பட்ட பாதுகாப்புடன், பொருளாதார வாய்ப்பினை இணைக்கிறது.” என அமெரிக்கத் தூதுவர் எரிக் மயர் தெரிவித்தார்.
“அமெரிக்க விவசாயிகளுக்குப் புதிய வாய்ப்புகளை உருவாக்கி, இரு நாடுகளுக்கும் பயனளிக்கும் வகையிலான ஒத்துழைப்பை பலப்படுத்தும் வகையில் வருகை தரும் ஆளுநர் ஜியன்ஃபோர்ட்டே அவர்களையும், முதற்பெண்மணி சூசன் ஜியன்ஃபோர்ட்டே அவர்களையும், மற்றும் மொன்டானா மாநில தூதுக்குழுவையும் வரவேற்பதற்கு நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.” என அவர் மேலும் தெரிவித்தார்.
2021 ஆம் ஆண்டு முதல் இலங்கைக்கும் மொன்டானா மாநிலத்திற்குமிடையே ஒரு இணைப்பை ஏற்படுத்தியிருக்கும் State Partnership Program நிகழ்ச்சித்திட்டத்தினூடாக பாதுகாப்பு
ஒத்துழைப்பினை மேம்படுத்துவதற்காக, மொன்டானா மாநிலத்தின் சிரேஷ்ட இராணுவ அதிகாரியும், மொன்டானா தேசிய காவற் படையின் கட்டளைத் தளபதியுமான பிரிகேடியர் ஜெனரல் ட்ரென்டன் கிப்ஸனும் ஆளுநரின் தூதுக்குழுவுடன் வருகை தருவார்.
பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு நடவடிக்கைகள், கடல்சார் விழிப்புணர்வு மற்றும் தொழில்முறை இராணுவக் கல்வி ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை முறைப்படுத்துவதற்காகவும், அவற்றை விரிவுபடுத்துவதற்காகவும், 2025 ஆம் ஆண்டில் மொன்டானா தேசிய காவற் படையும் இலங்கையின் பாதுகாப்பமைச்சும் ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டன.
இப்பங்காண்மையானது, மொன்டானாவிற்கும், இலங்கைக்குமிடையே நீடித்த உறவுகளைக் கட்டியெழுப்பும் அதேவேளை, பேரனர்த்தங்களை எதிர்கொள்வதற்கான தயார்நிலை, கடல்சார் பாதுகாப்பு, மற்றும் இராணுவ அதிகாரிகளின் தொழில்முறைத் திறன்கள் ஆகியவற்றையும் பலப்படுத்துகிறது. மொன்டானா மாநில ஆளுநரின் இவ்விஜயமானது, அவ்வொத்துழைப்பை ஆழப்படுத்துவதுடன், விவசாய வர்த்தகத்திற்கான புதிய வாய்ப்புகளையும் உருவாக்கும்.