கிரமடோர்ஸ்க் பேருந்துகள் மீது ரஷ்யா தாக்குதல் - 33 பேர் உயிரிழப்பு

உக்ரைனின் முன்னணிக் களப்பகுதியில் அமைந்துள்ள கிரமடோர்ஸ்க் நகரில் பயணிகளை ஏற்றிச் சென்ற இரண்டு பேருந்துகள் மீது ரஷ்யா நடத்தியதாகக் கூறப்படும் கிளைடு குண்டுத் தாக்குதலில் 33 பேர் உயிரிழந்துள்ளதாக மீட்புப் பணி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தாக்குதலில் மேலும் 18 பேர் காயமடைந்துள்ளதாக டொனெட்ஸ்க் பிராந்திய ஆளுநர் வாடிம் ஃபிலாஷ்கின் தெரிவித்துள்ளார். பொதுமக்களை ஏற்றிச் சென்ற பேருந்துகள் குறிவைக்கப்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

தாக்குதலுக்குப் பின்னர் பேருந்துகள் தீப்பற்றி எரிந்ததுடன், சம்பவ இடத்தில் சிதறிக் கிடந்த இடிபாடுகள் மற்றும் உயிரிழந்தவர்களின் உடல்கள் தொடர்பான காட்சிகள் வெளியாகியுள்ளன.

கிரமடோர்ஸ்க் மற்றும் அதனை அண்டிய ஸ்லோவியான்ஸ்க் உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கிய டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் ரஷ்யப் படைகளின் தாக்குதல்கள் அதிகரித்துள்ள நிலையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தொடர்ந்து மோசமடைந்து வரும் பாதுகாப்பு நிலைமையைக் கருத்தில் கொண்டு, கிரமடோர்ஸ்க் மற்றும் ஸ்லோவியான்ஸ்க் பகுதிகளில் அனைத்து பொதுப் போக்குவரத்து சேவைகளையும் நிறுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் ஃபிலாஷ்கின் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, உக்ரைனின் தலைநகர் கீவ் உள்ளிட்ட பல பகுதிகளிலும் ரஷ்யாவின் வான்வழித் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன. இதனால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதுடன், மின்சாரம் மற்றும் குடிநீர் விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிரமடோர்ஸ்க் நகர சபை, இந்தத் தாக்குதலை பொதுமக்களை பாதிக்கும் தாக்குதலாகக் கண்டித்துள்ளதுடன், சம்பவம் தொடர்பில் ரஷ்யா இதுவரை உத்தியோகபூர்வ கருத்து எதனையும் வெளியிடவில்லை.

Bootstrap