ராஜபக்ஷ குடும்பத்தினர் முதல் முக்கிய புள்ளிகள் வரை: நாடாளுமன்றில் பட்டியலை வெளியிட்டு பிமல் ரத்நாயக்க அதிரடி!

கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் பல்வேறு அரசியல்வாதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகள் தொடர்பான பல்வேறு தகவல்கள் நாடாளுமன்றத்தில் வெளிக்கொணரப்பட்டுள்ளன.

நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றிய சபை முதல்வரான அமைச்சர் பிமல் ரத்நாயக்க இந்தக் தகவல்களை முன்வைத்தார்.

தற்போதைய அரசாங்கம் அரசியல் பழிவாங்கலில் ஈடுபடுவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டில் எந்தவித அடிப்படையும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

2015 முதல் 2019 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் பல அரசியல்வாதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு எதிராக முறைப்பாடுகள் செய்யப்பட்டு, சட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் அமைச்சர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, விமல் வீரவன்ச, மஹிந்தானந்த அளுத்கமகே, பசில் ராஜபக்ச, ராஜித சேனாரத்ன, ரவி கருணாநாயக்க, பிரசன்ன ரணதுங்க மற்றும் பிரியங்கர ஜயரத்ன உள்ளிட்டோருக்கு எதிரான பல்வேறு வழக்குகளையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், நாமல் ராஜபக்ச, யோஷித ராஜபக்ச உள்ளிட்ட ராஜபக்ச குடும்ப உறுப்பினர்களுடன் தொடர்புடைய பல்வேறு நிதி மற்றும் அரச வள பயன்பாட்டு விவகாரங்கள் தொடர்பான விசாரணைகளும் இடம்பெற்றதாக அவர் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராகவும் வழக்குகள் மற்றும் விசாரணைகள் இடம்பெற்றுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அர்ஜுன மகேந்திரன், அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன உள்ளிட்டோருக்கு எதிரான மத்திய வங்கி பிணைமுறி விவகார வழக்குகளும், முன்னாள் பிரதி காவல்துறை மாஅதிபர் நாலக டி சில்வா உள்ளிட்டோருக்கு எதிரான விசாரணைகளும் இடம்பெற்றதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், வசீம் தாஜுடீன் மரண வழக்கு, லசந்த விக்ரமதுங்க மரணம் , பிரகீத் எக்னெலிகொட காணாமல் போனமை, கீத் நொயார் மற்றும் உபாலி தென்னகோன் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் உள்ளிட்ட பல முக்கிய வழக்குகளும் கடந்த காலங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

எனினும், இந்த வழக்குகள் தற்போதைய அரசாங்கத்தினால் புதிதாக உருவாக்கப்பட்டவை அல்ல எனவும், அவற்றில் பெரும்பாலானவை முந்தைய காலப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளுடன் தொடர்புடையவை எனவும் அவர் வலியுறுத்தினார்.

குறித்த விசாரணைகளில் தற்போதைய அரசாங்கம் தலையிடவில்லை எனவும், விசாரணை அதிகாரிகளுக்கு தேவையான சுதந்திரத்தையும் ஆதரவையும் வழங்கி, சட்ட நடவடிக்கைகள் நீதிமன்றத்தின் ஊடாக முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

குறிப்பாக, விசாரணை அதிகாரிகள் தங்களுடைய கடமைகளை சுயாதீனமாக முன்னெடுத்ததன் காரணமாகவே சில வழக்குகள் இந்த நிலைமைக்கு வந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இடையில் ஏற்பட்ட அரசியல் தொடர்புகள் மற்றும் தனிப்பட்ட நட்புறவுகள் காரணமாக சில விசாரணைகள் பாதிக்கப்பட்டதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.

2019ஆம் ஆண்டு கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின்னர், சில வழக்குகள் கைவிடப்பட்டதாகவும் அல்லது அவற்றின் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டதாகவும் அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கம் அரசியல் பழிவாங்கலில் ஈடுபடுவதாக எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டையும் அவர் நிராகரித்தார்.

அரசாங்கம் உண்மையில் பழிவாங்கும் நோக்கத்துடன் செயற்பட்டிருந்தால், ஜனாதிபதி பதவியும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலமும் மக்கள் வழங்கிய வலுவான ஆணையும் இருப்பதால், அதனை பயன்படுத்தியிருக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

எனினும், அரசாங்கத்துக்கு அவ்வாறான எந்தவொரு தேவையும் இல்லை எனவும், விசாரணை நிறுவனங்கள் தங்களுடைய பணிகளை சுயாதீனமாக மேற்கொள்வதற்கான சூழலை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் எனவும் அவர் தெரிவித்தார்.

அதேவேளை, வழக்குகள் மற்றும் விசாரணைகளில் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்படும் அரசியல்வாதிகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் நிலைமை தொடர்பில் அரசாங்கத்திற்கு புரிதல் இருப்பதாகவும் அவர் கூறினார்.

வழக்குகளை எதிர்கொள்ளும் நபர்களின் பிள்ளைகள், மனைவிகள் மற்றும் பெற்றோர்கள் எதிர்கொள்ளக்கூடிய பாதிப்புகள் குறித்து தமக்கு கவலை இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

எனினும், தனிப்பட்ட உணர்வுகளை விட சட்டத்திற்கும் மக்களுக்கும் பொறுப்புக்கூறுவது அரசாங்கத்தின் முக்கிய கடமை என அவர் வலியுறுத்தினார்.

கடந்த அரசாங்கங்களின் ஆட்சிக் காலங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளைப் போன்று தற்போதைய அரசாங்கம் செயற்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

எனவே, தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக முன்வைக்கப்படும் அரசியல் பழிவாங்கல் குற்றச்சாட்டுகளுக்கு எந்தவிதமான அடிப்படையும் இல்லை எனவும், சட்டம் அதன் வழியில் செயற்படுவதற்கு அரசாங்கம் இடமளித்து வருவதாகவும் சபை முதல்வரான அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

Bootstrap