கறுப்பு ஜூலை திட்டமிட்ட அரசியல் சதி – இளங்குமரன் எம்.பி.

1983ஆம் ஆண்டு ஜூலை 24 முதல் 30ஆம் திகதி வரை இடம்பெற்ற இனக்கலவரம் தற்செயலாக நிகழ்ந்ததல்ல; அரசியல் இலாபத்திற்காகவும் இனங்களுக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்தவும் அப்போதைய ஆட்சியாளர்களால் திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்ட சதி என யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

1983ஆம் ஆண்டு கறுப்பு ஜூலை இனப்படுகொலை தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு அமைத்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற யோசனையை முன்வைத்த பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனுக்கு நன்றிகளைத் தெரிவித்த இளங்குமரன், 1983ஆம் ஆண்டு கலவரத்திற்கு முன்னதாக இடம்பெற்ற சம்பவங்கள் குறித்தும் ஆராய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

1981ஆம் ஆண்டு யாழ்ப்பாணப் பொது நூலகம் எரிக்கப்பட்ட சம்பவம், தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலின் தொடக்கமாக அமைந்ததாகக் குறிப்பிட்ட அவர், அச்சம்பவத்திற்கு அன்றைய அரசாங்கம் உரிய நீதி வழங்கியிருந்தால் 1983ஆம் ஆண்டு இனக்கலவரத்தைத் தடுத்திருக்க முடியும் என்றும் தெரிவித்தார்.

மேலும், கறுப்பு ஜூலை வன்முறைகளின்போது கொழும்பில் வாழ்ந்த பல தமிழ் மக்களைச் சிங்கள மக்கள் தமது வீடுகளில் பாதுகாத்ததாகக் குறிப்பிட்ட அவர், இந்த வன்முறைகளுக்கு ஒட்டுமொத்த சிங்கள மக்களையும் பொறுப்பாக்க முடியாது எனச் சுட்டிக்காட்டினார்.

இனங்களுக்கிடையில் பிரிவினையைத் தூண்டிய அரசியல்வாதிகளின் செயற்பாடுகளே இத்தகைய வன்முறைகளுக்குக் காரணம் என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.

இலங்கைக்குச் சுதந்திரம் கிடைத்த காலத்திலிருந்து அரசியல் இலாபத்திற்காக இனவாதம் வளர்க்கப்பட்டதாகத் தெரிவித்த அவர், தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களைப் பிரித்து அரசியல் செய்வதற்குப் பதிலாக அனைவரும் சமத்துவத்துடனும் ஒற்றுமையுடனும் வாழக்கூடிய சூழலை உருவாக்க வேண்டும் என்றார்.

கறுப்பு ஜூலை சம்பவம் தொடர்பில் உண்மையான நீதி நிலைநாட்டப்படுவதன் மூலமே, எதிர்காலத்தில் இத்தகைய வன்முறைகள் மீண்டும் இடம்பெறுவதைத் தடுத்து, சமத்துவமான சமூகத்தை உருவாக்க முடியும் என்றும் இளங்குமரன் வலியுறுத்தினார்.

Bootstrap