அமைதிக்கான நோபல் பரிசு தனக்கே கொடுக்கப்பட வேண்டும்: ட்ரம்ப் மீண்டும் புலம்பல்

மனிதகுலத்திற்கு பயனுள்ள வகையில் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், இலக்கியம், அமைதி ஆகிய துறைகளில் மிகச்சிறந்த சாதனைகளை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் உலகின் மிக உயரிய நோபல் பரிசு வழங்கி கவுரவிக்கப்படுகிறது. நடப்பாண்டில் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், உள்ளிட்ட துறைகளுக்கான நோபல் பரிசுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், அமைதிக்கான நோபல் பரிசு இன்று (வெள்ளிக்கிழமை) அறிவிக்கப்பட உள்ளது.

அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் பதவியேற்றது முதல் தொடர்ந்து போர்களை நிறுத்தியதற்காக அமைதிக்கான நோபல் பரிசு தனக்கு வழங்கவேண்டும் என கடந்த ஆண்டு வலியுறுத்தினார். அதனை மீறி வெனிசுலாவைச் சேர்ந்த மரியா மச்சாடோவுக்கு வழங்கப்பட்டது. இந்தநிலையில் அமைதிக்கான நோபல் பரிசு இந்தமுறை தனக்கே வேண்டும் என ட்ரம்ப் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் ட்ரம்ப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

வேறு எந்த உலகத்தலைவரும் செய்யாத சாதனைகளை நான் செய்துள்ளேன். இதை நான் பெருமைக்காகச் சொல்லவில்லை, உண்மையைத்தான் கூறுகிறேன். இதுவரை எந்தவொரு தலைவர்களும் போர்களை முடிவுக்குக் கொண்டுவந்ததில்லை என்று நினைக்கிறேன். ஆனால், நான் 8 போர்களை முடிவுக்கு கொண்டு வந்துள்ளேன்.

என்னைப் போன்றவர்களுக்கு விருது வழங்காத ஒரு போக்கு நோபல் பரிசு கமிட்டியிடம் உள்ளது. எனக்கு அந்த விருதை வழங்காவிட்டால் அது அவர்களுக்குத்தான் பெரும் அவப்பெயராக அமையும். ஒபாமாவை விட நோபல் பரிசைப் பெற நான் அதிக தகுதியுடையவன். 2009-ம் ஆண்டில் தனக்கு ஏன் நோபல் அமைதிப் பரிசு வழங்கப்பட்டது என்பது ஒபாமாவுக்கே தெரியாது. இவ்வாறு அவர் கூறினார்.

Bootstrap