நவீன கால தாமஸ் எடிசன்' - எலான் மஸ்கிற்கு அமெரிக்காவின் உயரிய விருது.. பாராட்டிய ட்ரம்ப்!

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைவரான எலான் மஸ்கிற்கு அமெரிக்காவின் உயரிய விருதான 'தேசிய அறிவியல் பதக்கத்தை' (National Medal of Science) வழங்கி கௌரவித்தார். செயற்கை நுண்ணறிவு உட்பட, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களில் கவனம் செலுத்திய நிர்வாகத்தின் ஒரு பகுதியாக இந்த விருது வழங்கப்பட்டது.

வாஷிங்டன் டி.சி.யில் உள்ள அமெரிக்க அமைதி நிறுவனத்தில் ‘ஒரு புதிய பொற்காலம்’என்கிற ஒரு நிகழ்வு நடைபெற்றது. ​இதில், விண்வெளித் தொழில்நுட்பம், செயற்கைக்கோள் தகவல் தொடர்பு மற்றும் பிற துறைகளில் ஆற்றியவர்கள் கவுரவிக்கப்பட்டனர். அப்போது பேசிய அதிபர் ட்ரம்ப், அமெரிக்க விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அனுப்ப பிற நாடுகளைச் சார்ந்திருந்த நிலையை ஸ்பேஸ் எக்ஸ் மாற்றியமைத்து உள்ளதாகவும், உலகின் மிகப்பெரிய ராக்கெட்டான 'ஸ்டார்ஷிப்' மற்றும் 'ஸ்டார்லிங்க்' இணைய சேவையின் மூலமாக விண்வெளித் துறையில் புதிய புரட்சியைச் செய்துள்ளதாகவும் பாராட்டினார். மேலும், கடந்த 75 ஆண்டுகளில் அமெரிக்காவில் வெற்றிகரமாக உருவாகி இயங்கி வரும் புதிய கார் தயாரிப்பு நிறுவனம் டெஸ்லா மட்டுமே எனக் குறிப்பிட்டார்.

பின்னர், எலான் மஸ்க்கிற்கு தேசிய அறிவியல் பதக்கத்தை வழங்கி, அவரை ’நவீன கால தாமஸ் எடிசன்’ (Modern-day Thomas Edison) என்று புகழ்ந்துரைத்ததோடு, அமெரிக்க வரலாற்றில் நாட்டின் முன்னேற்றத்திற்காக மஸ்க் அளவுக்குப் பங்காற்றியவர்கள் மிகச் சிலரே என்றும் குறிப்பிட்டார். மேலும், அவரை ஒரு ’மாபெரும் ஆளுமை’, ’மேதை’ மற்றும் ’தேசிய பொக்கிஷம்’ என்றும் அழைத்தார்.

இந்நிகழ்வில் எலான் மஸ்க் தவிர, கூகுள் இணை நிறுவனர் செர்ஜி பிரின், என்விடியா சி.இ.ஓ ஜென்சன் ஹுவாங், மைக்ரோசாப்ட் சி.இ.ஓ சத்ய நாதெள்ளா மற்றும் டெல் நிறுவனர் மைக்கேல் டெல் உள்ளிட்ட முன்னணி தொழில்நுட்பத் தலைவர்களுக்கும் நாட்டின் உயரிய தொழில்நுட்ப விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டன. அதிபர் ட்ரம்ப்பால் கௌரவிக்கப்பட்ட ஆறு தொழில்நுட்பத் தலைவர்களில் ஐவர் அமெரிக்காவிற்குக் குடிபெயர்ந்தவர்கள். மஸ்க் தென்னாப்பிரிக்காவிலும், பிரின் ரஷ்யாவிலும், ஹுவாங் மற்றும் சூ தைவானிலும் பிறந்தனர். அதே சமயம், நடெல்லா இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்குக் குடிபெயர்ந்தார். டெல் டெக்சாஸில் பிறந்தார்.

முன்னதாக, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் உத்தரவைத் தொடர்ந்து, தனது நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவுப் பிரிவான 'SpaceXAI'-ஐ 'SpaceXSI' எனப் பெயர்மாற்றம் செய்வதாக எலான் மஸ்க் அறிவித்திருந்தார். 'செயற்கை நுண்ணறிவு' (Artificial Intelligence - AI) என்ற பெயரை மாற்றி, இனி 'சூப்பர் இண்டலிஜென்ஸ்' (Super Intelligence - SI) என்ற சொல்லைப் பயன்படுத்த வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டார். 'AI' என்பதற்குப் பதிலாக 'SI' என்பதே சிறந்தது என்று கூறி, தனது எக்ஸ் (X) தளத்தில் 'SpaceXAI' பெயரை 'SpaceXSI' என்று மாற்றுவதாக மஸ்க் உறுதிப்படுத்தினார்.

Bootstrap