பிரித்தானியாவைச் சேர்ந்த விவசாயி, 1295 கிலோ எடையில் பூசணிக்காய் வளர்த்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
பிரித்தானியாவின் ஹாம்ப்ஷயர் பகுதியைச் சேர்ந்த 65 வயதான இயன் பேட்டன் என்ற விவசாயி 1,295.8 கிலோகிராம் (2,856 பவுண்ட் 12.8 அவுன்ஸ்) எடையுள்ள பூசணிக்காயை வளர்த்துள்ளார்.
இந்த பூசணிக்காய், உலக அளவில் இதுவரை வளர்க்கப்பட்ட காய்கறிகள் மற்றும் பழங்களிலேயே மிக அதிக எடையுள்ளது என கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
இது ஒரு வெள்ளைக் காண்டாமிருகத்தை விட அதிக எடை கொண்டது ஆகும். மகனின் ஆலோசனையைத் தொடர்ந்து, சிறுவர் நாவலான 'தி ஜங்கிள் புக்'கில் வரும் சிறுத்தையை அடிப்படையாகக் கொண்டு, அந்த பிரம்மாண்டமான பூசணிக்கு Bagheera என்று பெயர் சூட்டியுள்ளார். கடந்த ஆண்டில், தனது சகோதரர் ஸ்டூவர்டுடன் இணைந்து 1,278.8 கிலோகிராம் (2,819 பவுண்ட் 4 அவுன்ஸ்) எடையுள்ள Muggle என பெயர் சூட்டப்பட்ட பிரம்மாண்டமான பூசணிக்காயை சமர்ப்பித்து கின்னஸ் சாதனையை படைத்தனர்.
தற்போது அதை விட 20 கிலோ எடையுள்ள பூசணிக்காயை வளர்த்து அந்த சொந்த சாதனையை முறியடித்துள்ளனர்.
இந்த பூசணிக்காயை வளர்க்க தினமும் 6 மணி நேரம் செல்விட்டுள்ள அவர், இந்த பூசணிக்கு தினமும் 590 லிட்டர் வரை தண்ணீர் செலவிட்டுள்ளார்.
இந்த சாதனை பூசணிக்காய், சவுத்தாம்ப்டன் அருகிலுள்ள சன்னிஃபீல்ட்ஸ் பண்ணையில் பொதுமக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்படும். அதன்பின்னர், மாடுகளுக்கு உணவாகப் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது