மெக்சிகோவில் அவுஸ்திரேலிய சகோதரர்கள் உட்பட மூவர் உயிரிழந்த சம்பவம்: மூவர் குற்றவாளிகளாக அறிவிப்பு

2024ஆம் ஆண்டு மெக்சிகோவுக்குச் சுற்றுலா சென்றிருந்தபோது உயிரிழந்த அவுஸ்திரேலிய சகோதரர்கள் இருவர் மற்றும் அவர்களது அமெரிக்க நண்பர் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரைக் குற்றவாளிகளாக மெக்சிகோ நீதிமன்றம் அறிவித்துள்ளது.

சட்டக் காரணங்களால் குற்றவாளிகளின் முழுப் பெயர்கள் வெளியிடப்படவில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

எனினும், ஜேசுஸ் ஜெரார்டோ (Jesús Gerardo), இரினியோ பிரான்சிஸ்கோ (Irineo Francisco) மற்றும் ஏஞ்சல் ஜேசுஸ் (Ángel Jesús) ஆகிய மூவரே இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான தண்டனை விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படவுள்ளதுடன், ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுவதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜேக் ரொபின்சன் (Jake Robinson), அவரது சகோதரர் கலம் ரொபின்சன் (Callum Robinson) மற்றும் அவர்களது அமெரிக்க நண்பரான கார்டர் ரோட் (Carter Rhoad) ஆகிய மூவரும் மெக்சிகோவின் பாஜா கலிபோர்னியா (Baja California) மாநிலத்தின் கடற்கரைப் பகுதியில் கூடாரமிட்டு தங்கியிருந்ததுடன், அங்கு அலைச்சறுக்கு விளையாட்டிலும் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது, அவர்கள் பயன்படுத்திய ட்ரக் வாகனம் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளைக் கொள்ளையிட முயன்றபோது ஏற்பட்ட முரண்பாட்டைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மூவரும் தலையில் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்ததாகவும், பின்னர் அவர்களது உடலங்கள் அருகிலிருந்த கிணறு ஒன்றில் வீசப்பட்ட நிலையில் மீட்கப்பட்டதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தச் சம்பவம் அக்காலப்பகுதியில் அவுஸ்திரேலியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

சுற்றுலாப் பயணிகளுக்கு ஒப்பீட்டளவில் பாதுகாப்பான பகுதியாகக் கருதப்பட்ட என்செனாடா (Ensenada) கடற்கரைப் பிராந்தியத்தின் பாதுகாப்பு குறித்தும் இச்சம்பவம் பரவலான விவாதங்களை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Bootstrap