சவூதி அரேபியாவில் உள்ள இலங்கையர்களுக்கு தூதரகம் விசேட அறிவிப்பு

சவூதி அரேபியாவில் வசிக்கும் மற்றும் அந்தநாட்டுக்குச் செல்லும் இலங்கையர்கள், அந்தநாட்டு அரசாங்கம் வழங்கும் பாதுகாப்பு அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு ரியாத்திலுள்ள இலங்கைத் தூதரகம் கோரிக்கை விடுத்துள்ளது.

யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்களால் முன்னெடுக்கப்படும் தாக்குதல்களைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், காணொளிகள் மற்றும் சமூக ஊடகப் பதிவுகளைப் பகிர்வதைத் தவிர்த்து, நம்பகமான தகவல் மூலங்களை மாத்திரம் பயன்படுத்துமாறும் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

ரியாத்திலுள்ள இலங்கைத் தூதரகம் மற்றும் ஜெட்டாவிலுள்ள இலங்கைத் துணைத் தூதரகத்தின் பொதுவான பணிகள் வழமைபோன்று இடம்பெறுகின்றன.

தூதரகச் சேவைகள் தொடர்பான அவசர உதவிகளுக்கு 054 947 7567 என்ற தொலைபேசி இலக்கத்தைத் தொடர்புகொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சவூதி அரேபியாவின் ரியாத் கிங் காலித் சர்வதேச வானூர்தி நிலையம் மற்றும் யேமனின் ஏடன் சர்வதேச வானூர்தி நிலையம் ஆகியவற்றை இலக்குவைத்து நடத்தப்பட்ட ஹூதி தாக்குதல்களைத் தொடர்ந்து, பல வானூர்தி நிறுவனங்கள் தமது வானூர்தி பயணங்களை இரத்துச் செய்துள்ளன.

சவூதி அரேபியாவின் அப்ஹா சர்வதேச வானூர்தி நிலையம் மீதான தாக்குதல்களில் மொரோக்கோ மற்றும் அல்ஜீரியாவைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 28 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்தத் தாக்குதல்களில் சவூதி வானூர்தி சேவையின் விமானி ஒருவரும் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கொழும்புக்கும் ரியாத்துக்கும் இடையிலான வானூர்தி சேவைகளும் தற்போது இடம்பெறவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

Bootstrap