தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் வரிக்குதிரைக்கு அறுவைச் சிகிச்சை பரிந்துரை!

தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் உள்ள பெண் வரிக்குதிரை ஒன்றுக்கு செரிமானப் பாதையில் ஏற்பட்ட அடைப்பை நீக்குவதற்காக அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

குறித்த வரிக்குதிரை, கடந்த செப்டெம்பர் 29ஆம் திகதி முதல் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

மிருகக்காட்சிசாலையில் உள்ள இரண்டு பெண் வரிக்குதிரைகளில் ஒன்றான இதற்கு, மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகள் மற்றும் ஸ்கேன் பரிசோதனைகள் மூலம் செரிமானப் பாதையில் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

இதனையடுத்து, மிருகக்காட்சிசாலையின் கால்நடை மருத்துவக் குழுவினர் அதற்குத் தொடர்ந்து சிகிச்சையளித்து வந்தனர்.

எனினும், அதன் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாததைத் தொடர்ந்து, பேராதனைப் பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவ பீடத்தில் குதிரை இனங்கள் தொடர்பான நிபுணத்துவம் பெற்ற சிரேஷ்ட விரிவுரையாளர் வைத்தியர் தம்மிக்க பெரேராவின் ஆலோசனை கோரப்பட்டது.

கடந்த ஒக்டோபர் 8ஆம் திகதி மேலதிக பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, மருந்து சிகிச்சையின் மூலம் அடைப்பை நீக்க முடியாத காரணத்தால் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ள நிபுணர்கள் பரிந்துரைத்தனர்.

இதன்படி, நிபுணத்துவ கால்நடை மருத்துவர் மற்றும் தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் கால்நடை மருத்துவ அதிகாரிகள் பங்கேற்புடன், ஒக்டோபர் 9ஆம் திகதி மாலை அறுவைச் சிகிச்சையை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டிருந்தது.

நிபுணர்களின் ஆலோசனைக்கு அமைய, வரிக்குதிரைக்குத் தேவையான மருத்துவ சிகிச்சைகளை வழங்கி அதன் உடல்நிலையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தேசிய விலங்கியல் பூங்காக்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், வரிக்குதிரையின் உடல்நிலை தொடர்பான மேலதிக தகவல்கள் தேவைப்படும் சந்தர்ப்பங்களில் வெளியிடப்படும் என்றும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Bootstrap