நவி பிள்ளைக்கு இந்த மகத்தானதும் மிகவும் தகுதியானதுமான நோபல் அமைதிப் பரிசு கிடைத்துள்ளமைக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனக் கனேடிய அரசியல்வாதியும் சட்டத்தரணியுமான கேரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் அவர் வெளியிட்ட முகநூல் பக்கத்திலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேற்படி பதிவில்,
நவி பிள்ளை எனக்கும் எனது மனைவிக்கும் வழிகாட்டியாகவும் நண்பராகவும் இருந்திருக்கிறார்.
என்னுடைய மறைந்த மாமனார் என். சிவலிங்கம் நினைவாக, யோர்க் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முதலாவது என். சிவலிங்கம் நினைவுப் பேருரையை நிகழ்த்துவதற்காக அவரை வரவேற்றது எங்களுக்குப் பெருமையாக இருந்தது.
அவர் கனடாவுக்கு விஜயம் செய்ததை நினைவுகூரும் வகையில், ஓவியர் விக்டர் எம்மானுவேல், தென்னாப்பிரிக்காவின் நிறவெறி எதிர்ப்பு இயக்கத்தால் ஈர்க்கப்பட்ட “ஒரு தேசத்தின் பிறப்பு” (A Birth of a Nation) என்ற தலைப்பிலான ஓவியத்தை அவருக்கு வழங்கினார்.
மேலும், ஒஸ்கூட் ஹால் சட்டக் கல்லூரியில் அவரது பெயரில் தமிழ் சமூகத்தினரால் கல்வி உதவித்தொகையும் நிறுவப்பட்டது. மோரிஷ் பொதுப் பாடசாலைக்கு அவர் விஜயம் செய்து, அங்குள்ள இளம் மாணவர்களைச் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடினார்.
அப்போது சிறுவர்களாக இருந்த அவர்கள், இன்று பெரியவர்களாக வளர்ந்துள்ள நிலையிலும், நவியை ஒரு முன்மாதிரியாகக் கருதி அவரிடமிருந்து உத்வேகம் பெற்று வருகின்றனர்.
அவரது அந்த விஜயம் அவர்களது மனதில் அழியாத தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. நவியால் உத்வேகம் பெற்றுள்ள கனேடியத் தமிழ் சமூகத்தின் செயற்பாட்டாளர்கள் சார்பாக அவருக்கு எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.