கடல் உள்வாங்கிய இடத்தில் செல்ஃபி மோகம்: எச்சரித்து விரட்டியடித்த காவல்துறையினர்!

தமிழகத்தில் -திருச்செந்தூர் முருகன் கோயில் கடற்கரைப் பகுதியில் வழக்கத்திற்கு மாறாக திடீரென கடல் நீர் சுமார் 50 அடி முதல் 100 அடி வரை உள்வாங்கியது.

இதனால் வழக்கமாக நீரால் சூழப்பட்டிருக்கும் கடலுக்கு அடியில் உள்ள பாசி படர்ந்த அபாயகரமான பாறைகள் மற்றும் மணற்பரப்புகள் வெளியே தெரியத் தொடங்கின.

அமாவாசை மற்றும் பௌர்ணமி தினங்களில் கடல் நீர் மட்டத்தில் ஏற்படும் இயற்கை மாற்றங்கள் காரணமாக இத்தகைய நிகழ்வுகள் அவ்வப்போது இடம்பெறுவது வழக்கம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

கடல் உள்வாங்கியதைக் கண்ட பக்தர்கள் சிலர், அதன் ஆபத்தை உணராமல் பாசி படர்ந்த பாறைகளின் மீது ஏறி நின்று ஆர்வத்துடன் 'செல்ஃபி' (Selfie) படங்களை எடுக்கத் தொடங்கினர்.

பாறைகளில் பாசி படிந்திருப்பதால் வழுக்கி விழும் அபாயம் அதிகமாக இருந்தது.

உடனடியாகச் செயற்பட்ட கடலோரக் காவல்துறையினர் மற்றும் கோயில் பாதுகாப்பு ஊழியர்கள், ஒலிபெருக்கிகள் மூலம் பக்தர்களை எச்சரித்து பாறைப் பகுதிகளிலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றினர்.

அத்துடன், அந்த பகுதியில் அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாதவாறு தற்காலிகமாகப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Bootstrap