இங்கிலாந்து முழுவதும் கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமை மாலை வேளைகளில், வானில் தோன்றிய ‘வடக்கு விளக்குகள்’ (Northern Lights) எனப்படும் அரோரா பொலிவுகள் (Aurora Borealis) பொதுமக்களை வியப்பிலும் பரவசத்திலும் ஆழ்த்தியுள்ளன.
சூரியனில் ஏற்பட்ட அதிகரித்த சூரியச் செயல்பாடுகளே இந்த இயற்கை அற்புதத்திற்குக் காரணமாகும்.
பொதுவாக, ஆர்க்டிக் வட்டம் மற்றும் வடக்கு ஸ்காட்லாந்துப் பகுதிகளிலேயே அதிகமாகத் தென்படும் இந்த நிகழ்வு, இங்கிலாந்தின் தெற்குப் பகுதிகளான டெவோன், ஹாம்ப்ஷயர் மற்றும் கென்ட் போன்ற பகுதிகளிலும் தெளிவாகத் தென்பட்டுள்ளது.
இது போன்று தெற்குப் பகுதிகளில் தோன்றுவது மிகவும் அபூர்வமான நிகழ்வாகும்.
நோர்போக்கில் இளஞ்சிவப்பு நிற மூடுபனியாகவும், நார்த் லிங்கன்ஷயர் மற்றும் சாலிஸ்பரியில் ஊதா நிறக் காட்சியாகவும், ஸ்காட்லாந்து மற்றும் கென்ட் உள்ளிட்ட பல பகுதிகளில் இளஞ்சிவப்பு, நீலம் மற்றும் பச்சை வண்ணங்களின் கலவையாகவும் இந்த வானியல் அதிசயம் பதிவாகியுள்ளது.
சூரியனில் ஏற்பட்ட சக்திவாய்ந்த வெடிப்புகளினால் ‘கொரோனல் மாஸ் எக்ஜெக்ஷன்ஸ்’ (CMEs) எனப்படும் மின்னேற்றம் பெற்ற துகள்கள் பூமியை நோக்கிப் பாய்ந்துள்ளன.
பூமியின் காந்தப்புலத்தால் ஈர்க்கப்பட்டு வளிமண்டலத்திற்குள் நுழையும் இந்த துகள்கள், அங்குள்ள ஒக்சிசன் மற்றும் நைட்ரஜன் வாயுக்களுடன் மோதும் போது இத்தகைய வண்ணமயமான ஒளிக்கதிர்கள் உருவாகின்றன.
சூரியனின் 11 ஆண்டு இயற்கைச் சுழற்சியின் காரணமாக, இந்த ஆண்டு (2026) அரோரா நிகழ்வுகளைப் பார்ப்பதற்கான உச்சக்கட்ட ஆண்டாக இருக்கும் என நிபுணர்கள் ஏற்கனவே கணித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.