அவசரநிலையை பிரகடனப்படுத்தி அதிகாரத்தை இடைநிறுத்திய பாகிஸ்தான் ஜனாதிபதி-

பாகிஸ்தானில் அவசரநிலையைப் பிரகடனப்படுத்தி, ஆளுநர் ஆட்சியை நடைமுறைப்படுத்துவதன் மூலம், சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் (PTI) கட்சி தலைமையிலான கைபர் பக்துன்க்வா மாகாண அரசின் அதிகாரங்களைப் பாகிஸ்தான் ஜனாதிபதி இடைநிறுத்தியுள்ளார்.

இந்த நடவடிக்கை இன்று(11.10.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பயங்கரவாதத்தை திறம்பட எதிர்கொள்வதிலும், சட்டம் - ஒழுங்கைப் பராமரிப்பதிலும் மாகாண நிர்வாகம் தவறிவிட்டதாகக் குற்றம் சாட்டிய பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் மத்திய அமைச்சரவை அளித்த பரிந்துரைகளைத் தொடர்ந்து, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அலுவலகத்தின் தகவலின்படி, பாகிஸ்தான் அரசியலமைப்பின் 232 மற்றும் 23-வது பிரிவுகளின் கீழ் இந்த அவசரக்கால நடவடிக்கைகள் அங்கீகரிக்கப்பட்டன. இதன் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட மாகாண அரசின் நிர்வாக அதிகாரங்கள் பறிக்கப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கையானது, ஆப்கானிஸ்தானுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் வடமேற்கு மாகாணத்தை, மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநரின் கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வருகின்றது.

மத்திய அரசுக்கும் கானின் PTI கட்சிக்கும் இடையே அரசியல் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கானை சிறையிலிருந்து விடுவிக்கக் கோரி அவரது ஆதரவாளர்கள் போராட்டங்களை நடத்தி வரும் நிலையில், PTI ஆதரவாளர்கள் இஸ்லாமாபாத்தை நோக்கி ஒரு பெரிய பேரணியை நடத்தவும் தயாராகி வருகின்றனர், இது அரசாங்கத்தின் மீதான அழுத்தத்தை அதிகரித்துள்ளது.

அதிகரித்து வரும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களைச் சுட்டிக்காட்டியும், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் மாகாண நிர்வாகம் போதுமான அளவு ஒத்துழைக்கவில்லை என்று குற்றம் சாட்டியும் மத்திய அரசு இந்த அவசரக்கால நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

இருப்பினும், இந்த முடிவை PTI கடுமையாகக் கண்டித்தது, இது ஜனநாயகத்தின் மீதும், மாகாணத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் மக்கள் ஆணையின் மீதும் நடத்தப்பட்ட தாக்குதல் என்றும் அந்த கட்சியினர் விமர்சனம் வெளியிட்டுள்ளனர்.

இந்த முடிவு மேலும் ஸ்திரமின்மைக்கும் வன்முறைக்கும் வழிவகுக்கக்கூடும் என்று கானின் செய்தித் தொடர்பாளர் ஜுல்பிகர் புகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த 2023 முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கான், பாகிஸ்தானின் எதிர்க்கட்சி அரசியலில் ஒரு முக்கிய நபராகவே பார்க்கப்படுகின்றார்.

கைபர் பக்துன்க்வா அரசு இடைநிறுத்தப்பட்டிருப்பது, கானின் கட்சிக்கும் மத்திய நிர்வாகத்திற்கும் இடையிலான மோதலில் ஒரு குறிப்பிடத்தக்க தீவிரமடைதலைக் குறிக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Bootstrap