3 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் செம்பியன்: மெல்பர்ன் மரதனில் எலியுட் கிப்சோகே புதிய சாதனை!

கென்யாவின் புகழ்பெற்ற மரதன் ஓட்டப்பந்தய வீரரும், இரண்டு முறை ஒலிம்பிக் செம்பியனுமான எலியுட் கிப்சோகே (Eliud Kipchoge), அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற மெல்பர்ன் மரதன் ஓட்டப்போட்டியில் புதிய சாதனையாருடன் செம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

கடந்த 2023 ஆம் ஆண்டு பெர்லின் மரதனில் வெற்றி பெற்ற பிறகு, கடந்த மூன்று ஆண்டுகளாக கிப்சோகே எந்த ஒரு மரதன் போட்டியிலும் முதலிடம் பிடிக்கவில்லை.

இந்த நிலையில், 41 வயதான கிப்சோகே 42.195 கி.மீ தூரத்தைக் கொண்ட மெல்பர்ன் மரதன் ஓட்டப்போட்டியை 2 மணிநேரம் 09 நிமிடங்கள் 10 வினாடிகளில் கடந்து முதலாவதாக நிறைவு செய்து வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தார்.

இந்த வெற்றியின் மூலம் மெல்பர்ன் மரதன் வரலாற்றில் முந்தைய சாதனையை (2:09:12) 2 வினாடிகள் குறைத்து புதிய சாதனையைப் படைத்துள்ளார். போட்டியில் அவுஸ்திரேலியாவின் தாமஸ் டோ கான்டோ (2:10:35) இரண்டாமிடத்தையும், ரீஸ் எட்வர்ட்ஸ் மூன்றாமிடத்தையும் பிடித்தனர்.

உலகின் 7 கண்டங்களிலும் மரதன் போட்டிகளை நிறைவு செய்யும் தனது இரண்டு வருட உலகப் பயணத்தின் (World Tour) ஒரு பகுதியாக கிப்சோகே இந்தப்போட்டியில் பங்கேற்றார்.

வெற்றியைத் தொடர்ந்து பேசிய அவர், "இளம் தலைமுறை வீரர்களுடன் ஓடி வெற்றி பெறுவது மகிழ்ச்சியளிக்கிறது; எனது உடல் இன்னும் உச்சக்கட்ட திறனுடன் இயங்குகிறது" எனத் தெரிவித்துள்ளார்.

Bootstrap