2100ஆம் ஆண்டுக்குள் மனிதகுலம் முழுமையாக அழியக்கூடும் - எச்சரிக்கும் புதிய ஆய்வறிக்கை!

அணு ஆயுத மோதல்கள் மற்றும் உயிரியல் ஆயுதங்களின் உருவாக்கம் உள்ளிட்ட செயற்கை நுண்ணறிவின் (AI) தீங்கிழைக்கும் பயன்பாடுகள் ஆகியவை எதிர்வரும் 2100ஆம் ஆண்டுக்குள் மனித இனம் முழுமையாக அழியக் காரணமாக அமைந்திடும் பாரிய அச்சுறுத்தல்களில் உள்ளதாகப் பிரபல மருத்துவ சஞ்சிகையான 'The Lancet' வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

மனிதகுலம் எதிர்கொள்ளக்கூடிய நூற்றுக்கணக்கான சாத்தியமான ஆபத்துகளைப் பகுப்பாய்வு செய்து வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வறிக்கையில், ஆபத்துகள் ஒரு பிரமிட் அமைப்பில் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

இதில் மனிதகுலத்தின் அழிவுக்கு வழிவகுக்கக்கூடிய மிக உச்சக்கட்ட அபாயகரமான முதல் பிரிவில் அணு மோதல்களுடன் செயற்கை நுண்ணறிவின் துஷ்பிரயோகமும் வைக்கப்பட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவானது தவறான கைகளில் சென்று சேரும்போது, அது புதிய உயிரியல் ஆயுதங்களை உருவாக்குவதற்கும் மனிதகுலத்திற்கே எதிரான பேரழிவுகளை ஏற்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படலாம் என்று ஆய்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

அணு மோதல்கள் உடனடி உயிரிழப்புகளை ஏற்படுத்தவல்லது மட்டுமல்லாமல், அதன் நீண்டகாலத் தாக்கமாக 'அணு பஞ்சம்' (Nuclear Famine) போன்ற உணவுப் பாதுகாப்பின்மைக்கும் வழிவகுக்கும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஆய்வறிக்கையானது சாத்தியமான தீங்குகளின் அளவைக் கருத்திற்கொண்டு உலகளாவிய அச்சுறுத்தல்களை நான்கு நிலைகளாகப் பிரித்துள்ளது.

அதன்படி மனிதகுலத்தின் அழிவுக்கு வழிவகுக்கும் அச்சுறுத்தல்கள் முதலாம் நிலையிலும், அதனைத் தொடர்ந்து பெரும் பேரழிவை ஏற்படுத்தக்கூடிய அச்சுறுத்தல்கள், முக்கிய ஆபத்துகள் மற்றும் காரணிகள், மற்றும் பரந்த அளவிலான அச்சுறுத்தல் சூழல் எனப் பிற பிரிவுகளும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

இதற்கிடையில், மனித ஆரோக்கியத்திற்கும் சமூகத்துக்கும் விரிவான சேதத்தை ஏற்படுத்தக்கூடிய 15 முக்கியப் பேரழிவு அச்சுறுத்தல்களையும் இந்த ஆய்வு தனித்தனியாகப் பட்டியலிட்டுள்ளது.

காற்று மாசுபாடு, நுண்ணுயிர் எதிர்ப்பி எதிர்ப்புத் திறன் (Antimicrobial Resistance), குழந்தைப் பருவ ஊட்டச்சத்தின்மை, பருவநிலை மாற்றம், பாரம்பரிய மோதல்கள், இயற்கையாகத் தோன்றும் தொற்றுகள், உடல் பருமன், மனநலப் பிரச்சினைகள், புகைப்பிடித்தல் மற்றும் வருமான சமத்துவமின்மை உள்ளிட்டவை இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

Bootstrap