ஏமனில் சவூதி கூட்டுப் படைகள் வான்வழித் தாக்குதல் – ஒருவர் உயிரிழப்பு; பலர் காயம்

சவூதி அரேபியா மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தொடர் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ஏமனின் தலைநகர் சனாவில் ஹூதிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகள் மீது சவூதி தலைமையிலான கூட்டுப் படைகள் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளன.

இந்தத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்துள்ளனர். சனாவில் உள்ள உப்பு ஆலை ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் எட்டு பேர் படுகாயமடைந்ததாகவும், குடியிருப்பு ஒன்றின் மீது நடத்தப்பட்ட மற்றொரு தாக்குதலில் பெண் ஒருவரும் மூன்று குழந்தைகளும் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையில், சவூதி தலைநகர் ரியாத்திலுள்ள மன்னர் காலித் சர்வதேச விமான நிலையத்தைக் குறிவைத்து ஹூதி கிளர்ச்சியாளர்கள் அண்மைய நாட்களில் தொடர் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளனர்.

இந்தத் தாக்குதல்களில் இந்தியர் ஒருவர் உட்பட 14 பேர் உயிரிழந்ததுடன், 320-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகக் கூறப்படுகின்றது.

விமான நிலையத்தை நோக்கி ஏவப்பட்ட ஏவுகணைகளை இடைமறித்து அழிப்பதில் சவூதியின் வான் பாதுகாப்பு அமைப்பு தவறியமை தொடர்பில் தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஹூதி படையினர் முதலில் அதிகளவிலான ஆளில்லா விமானங்களை ஏவிய பின்னர், அவற்றின் துணையுடன் பாலிஸ்டிக் மற்றும் க்ரூஸ் ஏவுகணைகளை ஏவியதாக ஆரம்பகட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்கத் தயாரிப்பான ‘பேட்ரியாட்’ வான் பாதுகாப்பு அமைப்பைத் தாண்டி ஏவுகணைகள் ஊடுருவிய விதம் மற்றும் 1,000 கிலோமீற்றருக்கும் அதிகமான தொலைவைக் கடந்து வந்த ஏவுகணைகள் தொடர்பில் முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கப்படாதது ஏன் என்பது குறித்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

பாதுகாப்புக் காரணங்களுக்காக மூடப்பட்டுள்ள மன்னர் காலித் சர்வதேச விமான நிலையத்தின் சேவைகள் மீண்டும் எப்போது ஆரம்பிக்கப்படும் என்பது குறித்து சவூதி பொது சிவில் விமானப் போக்குவரத்து ஆணைக்குழு இதுவரை அறிவிக்கவில்லை.

சவூதி அரேபியாவுக்கும் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான மோதலை இராஜதந்திர ரீதியில் முடிவுக்குக் கொண்டுவர மத்தியஸ்தம் செய்யத் தயாராக இருப்பதாக ஈரான் அறிவித்துள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் இஸ்ரேலின் நலன்களுக்கே வழிவகுக்கும் எனத் தெரிவித்த ஈரான் வெளியுறவு அமைச்சகப் பேச்சாளர் இஸ்மாயில் பாகேயி, பிராந்தியப் பதற்றத்தைத் தணிப்பதற்காக இரு தரப்பினருக்கும் இடையில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க ஈரான் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

Bootstrap