ட்ரம்பின் அறிவிப்பை அவமதித்த ரஷ்யா? உக்ரைன் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

உக்ரைனில் உள்ள பல்வேறு எரிசக்தி கட்டமைப்புகள் மற்றும் உள்கட்டமைப்புகள் மீது ரஷ்யப் படைகள் மீண்டும் தாக்குதலைத் தொடங்கியுள்ளன.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ரஷ்யா - உக்ரைன் இடையே உடனடி 'ஆற்றல் போர்நிறுத்தம்' அமுலுக்கு வந்துள்ளதாக அறிவித்த சில மணி நேரங்களிலேயே இந்த தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.

உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியின் உறுதிப்படுத்தலின்படி, கார்கீவ் பகுதியில் உள்ள மின் நிலையம், எரிவாயு உற்பத்தி நிலையங்கள் மற்றும் பொது எரிபொருள் நிரப்பு நிலையங்கள் இலக்கு வைத்து தாக்கப்பட்டுள்ளன.

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் அறிவிப்பு தனக்கு 'ஆச்சரியத்தைத் தந்தது' என்றும், ரஷ்யா தரப்பிலிருந்து இதுகுறித்து முறையான ஒப்புதல் எதுவும் வரவில்லை என்றும் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

உக்ரைன் இந்த போர்நிறுத்தத்தை முழுமையாக மதிக்கத் தயாராக இருப்பதாகவும், ஆனால் ரஷ்யா தொடர்ந்து தாக்குதல்களை நடத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

ரஷ்யாவின் இந்த தாக்குதல்களால் இஜியும் நகரில் மின்தடை ஏற்பட்டுள்ளதுடன், கார்கீவ், டொனெட்ஸ்க் மற்றும் ஜேபோரிஜியா ஆகிய பகுதிகளில் புதிய மின்வெட்டுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மேலும், சேதமடைந்த உபகரணங்களைச் சீரமைக்க மின்சாரப் பங்கீடு முறை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

Bootstrap